நேற்று நடைபெற்ற இந்தியா – தென்னாப்பிரிக்கா டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். இதன் மூலம் பல்வேறு சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியை அபாரமாக வீழ்த்தியது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.
1. இந்த சதத்தின் மூலம் சஞ்சு சாம்சன் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம், T20I கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்தார். 2024 அக்டோபர் 12-ஆம் தேதியன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற வங்கதேசத்துடனான போட்டியில் 47 பந்துகளில் 111 ரன்கள் எடுத்திருந்தார். மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் அடித்த நான்காவது வீரர் மற்றும் முதல் ஆசிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
இதையும் படிக்க:
பட்டைய கிளப்பிய சஞ்சு சாம்சன்… 61 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி
2. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சர்வதேச டி20 போட்டியில் சதம் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்தார். இவரைத் தவிர சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
3. தென்னாப்பிரிக்காவில் சர்வதேச டி20 போட்டியில் சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் சஞ்சு படைத்தார். 2023 டிசம்பர் 14 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற போட்டியில் சூர்யகுமார் யாதவ் 56 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து இந்த சாதனையை படைத்திருந்தார்.
4. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சதங்கள் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையை சஞ்சு படைத்தார். இவரைத் தவிர ரோஹித் சர்மா (5), சூர்யகுமார் யாதவ் (4), கே.எல். ராகுல் (2) ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
5. ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவுக்குப் பிறகு ஒரே வருடத்தில் இரண்டு சர்வதேச டி20 சதங்கள் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை சஞ்சு படைத்தார். 2018-ல் ரோஹித் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகவும், 2022-யில் சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராகவும், 2023-யில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் இரண்டு சதங்கள் அடித்துள்ளனர்.
6. சஞ்சு சாம்சனின் 50 பந்துகளில் 107 ரன்கள் என்பது இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான சர்வதேச டி20 போட்டிகளில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் ஆகும். 2015 அக்டோபர் 2-ல் தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில் ரோஹித் சர்மா 66 பந்துகளில் 106 ரன்கள் எடுத்திருந்தார். தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லரும் 2022 அக்டோபர் மாதத்தில் 106 ரன்கள் எடுத்திருந்தார்.
7. சஞ்சு சாம்சன் தனது 107 ரன்கள் இன்னிங்சில் 10 சிக்ஸர்கள் அடித்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு இலங்கையுடனான போட்டியில் ரோகித் சர்மா 10 சிக்ஸர்கள் விளாசியிருந்தார். இந்த போட்டியின் மூலம் சஞ்சு சாம்சன் ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
இதையும் படிக்க:
“எதற்கும் ஒரு எல்லை இருக்க வேண்டும்…” – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சாடிய ராபின் உத்தப்பா
8. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான சர்வதேச போட்டியில் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ரிலீ ரோசோவ் மற்றும் சூர்யகுமார் யாதவ் தலா 8 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. நேற்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் 10 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் இந்த சாதனையை முறியடித்துள்ளார்.
9. ரோஹித் சர்மாவுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ODI மற்றும் T20I இரண்டிலும் சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். ரோஹித் சர்மா தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று ODI சதங்கள் மற்றும் ஒரு T20I சதம் அடித்துள்ளார். சஞ்சு சாம்சன் இரண்டு விதமான போட்டிகளிலும் தலா ஒரு சதம் அடித்துள்ளார்.
.