இந்தியா-தென்னாப்ரிக்கா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் புதிய சாதனை படைத்தார்.
இந்தியா-தென்னாப்ரிக்கா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டர்பன் மைதானத்தில் நடந்துவருகிறது. 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, தென்னாப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இதில், முதல் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீடு மைதானத்தில் இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஓப்பனிங் கொடுத்தனர். இதில், அபிஷேக் ஷர்மா 7 ரன்களில் முதல் விக்கெட்டாக வெளியேறினார்.
இதன்பின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 21 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். இரு விக்கெட்கள் பறிபோனாலும், சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டத்தை கையாண்டார். 5 சிக்ஸர்களுடன் 28 பந்தில் தனது அரைசதத்தை பதிவு செய்த சஞ்சு சாம்சன், 47 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.
சர்வதேச டி20 கரியரில் சஞ்சு சாம்சனின் இரண்டாவது சதம் இதுவாகும். சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் சதம் அடித்து அசத்திய சஞ்சு, அதற்கடுத்த போட்டியிலும் இரண்டாவது சதம் விளாசினார். இதன்மூலம் அடுத்தடுத்த இரு போட்டிகளில் இரு சதங்களை விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் சஞ்சு. இதன்பின் 107 ரன்களில் அவர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
16 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்துள்ளது.
.