நியூசிலாந்து அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 147 ரன்கள் இலக்கைகூட எட்ட முடியாமல் தோல்வியடைந்தது.
25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மேட்ச்சில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களும், இந்தியா 263 ரன்களும் எடுத்திருந்தது. 2 ஆவது இன்னிங்ஸில் நியூசிலாந்து 174 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணியின் வெற்றிக்கு 147 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இருப்பினும் 29.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 121 ரன்கள் மட்டுமே எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது-
டெஸ்ட் தொடர் மற்றும் போட்டிகளில் தோல்வி அடைவது எளிதானது அல்ல. இந்த தோல்வியை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. எங்களது சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் வெளிப்படுத்தவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.
எங்களை விடவும் நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடியது. இலக்கு எளிதாக இருந்தது; வெற்றி பெற முடியும் என்று நினைத்தோம். நான் பேட்டிங் செய்யும் போது எனக்கு சில வியூகங்கள் தோன்றின. ஆனால் அதை களத்தில் நிறைவேற்ற முடியாதது அதிருப்தி அளிக்கிறது.
இந்த ஆடுகளங்களில் எப்படி விளையாட வேண்டும் என்பதை ரிஷப் பந்த், சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் செய்து காட்டியுள்ளனர். இந்த மைதானங்களில் நாங்கள் 3-4 ஆண்டுகளாக விளையாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட முடியாதது வேதனை அளிக்கிறது.
ஒரு பேட்ஸ்மேனாக, கேப்டனாக நான் எனது முழு திறமையை இந்த தொடரில் வெளிப்படுத்தவில்லை. ஒரு அணியாகவே நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. இவைதான் தோல்விக்கு காரணங்கள் என்று தெரிவித்தார்.
.