அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலந்தொட்டே மலையகத்தில் கல்வி கற்ற இளைஞர் யுவதிகளுக்கு அரசதுறைகளில் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்து வந்துள்ளதாக இ.தொ.கா பிரதம சட்ட ஆலோசகரும் சட்டத்தரணியுமான கா.மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் கொழும்பு ரேணுகா ஹோட்டல் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ‘பால்நிலை பொறுப்புக்களும், திறமான பொதுசேவைகளும்’ எனும் தலைப்பிலான இரண்டு நாள் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

பொது சேவைகளில் நன்மைகள், குறைபாடுகள் எவ்வாறாகவிருந்தாலும் இ.தொ.காவின் வேலைத்திட்டங்களில் அரசதுறையில் நம்மவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் அவரவர் தகுதிக்கேற்ப சகல துறைகளிலும் உள்வாங்கப்பட்டிருப்பது எமது சாதனையாகும். இன்றைய நிலைமையை உற்று நோக்கும்போது கல்வித்துறையில் அரசாங்க நிறுவனங்களிலும் திணைக்களங்களிலும் மலையக இளைஞர், யுவதிகள் கணிசமான அளவு நிரந்தர பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கின்றார்கள்.

நாம் மேற்கொள்ளும் பொதுசேவைகளில் குறைபாடுகள் இருப்பினும் அவற்றை இனங்கண்டு நிவர்த்தி செய்து பரிகாரமும் காணப்பட்டுள்ளது. அரசசேவைகளில் மலையக பெண்களின் பங்களிப்பு அதிகமாகவும், மிகத்திறமையாகவும், நேர்த்தியாகவும் அமைந்து வருகின்றது. ஆனால் காலப்போக்கில் அவர்களின் பங்களிப்பு சகல மட்டங்களிலும் விஸ்தரிக்கப்பட்டு எதற்குமே சளைத்தவர்கள் அல்ல என்ற நிலைமையை வெகுவிரைவில் காணமுடியும் என்பதில் நாம் நம்பிக்கை உடையவர்களாக இருக்கின்றோம்.

சர்வதேச பொதுசேவைகள் மன்றம் இலங்கையில் மாத்திரமல்லாது தென்கிழக்காசியாவிலும் பரந்துபட்ட சேவைகளை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் தென்கிழக்காசியாவின் பிரதான இணைப்பாளர் கண்ணன், இ.தொ.கா உபதலைவர் எஸ்.ராஜமணி ஆகியோர் உள்ளிட்ட 20 பங்குபற்றுனர்களும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post தொண்டமான் காலத்திலிருந்தே அரசதுறைகளில் மலையக இளைஞர்கள் உள்வாங்கப்பட்டனர் appeared first on Thinakaran.



Source link