விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழில்களில் ஒன்றாக விளங்குகிறது தீப்பெட்டி தொழில்.1923 ல் முதல் முறையாக தொடங்கப்பட்ட போது தீப்பெட்டி கைத்தொழில் ஆகவே இருந்தது. தீப்பெட்டி செய்வதற்கு தேவையான இயந்திரங்கள் வாங்க போதிய பணம் இல்லாத காரணத்தால், அப்போதைய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் உள்ளூர் மக்களின் உழைப்பை நம்பி தீப்பெட்டி தொழிலை தொடங்கினர். கிராம புறங்களுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து தீப்பெட்டி செய்ய பயிற்சி தந்து அவர்கள் மூலமாக தீப்பெட்டி தயாரிக்க தொடங்கினர்.
அன்றைய காலகட்டத்தில் சிவகாசி, சாத்தூர், விருதுநகர் சுற்றுவட்டாரத்தில் ஏற்பட்ட பஞ்சம் அதன் மூலம் ஏற்பட்ட வேலையின்மை காரணமாக பலர் இந்த தொழிலை கையில் எடுத்து குடிசை தொழிலாக செய்ய தொடங்கினர். இவ்வாறாக தீப்பெட்டி தொழில் இந்த பகுதியில் வளர தொடங்கியது. நாளடைவில் இங்கு தயார் செய்யப்படும் தீப்பெட்டிகளுக்கு தேவை அதிகரித்த காரணத்தால், தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி இயந்திரங்களை கொண்டு தீப்பெட்டி தயார் செய்ய தொடங்கினர்.
அதாவது முன்பு தீக்குச்சி அறுப்பது, தீக்குச்சிக்கு மருந்து தேய்த்தல், தீப்பெட்டி செய்தல் போன்ற வேலைகளில் முழுக்க முழுக்க மனிதர்கள் ஈடுபட்டு வந்தனர். தற்போது இயந்திர வருகைக்கு பிறகு அனைத்து வேலைகளையும் இயந்திரங்கள் செய்து வரும் நிலையில், இவற்றை ஒழுங்கு படுத்தும் வேலையில் மனித சக்தி பயன்பட்டு வருகிறது.
பாதி மனித சக்தி குறைந்து விட்ட நிலையில், தீப்பெட்டி தொழிலாளர்களின் வேலையை இயந்திரமயமாக்கல் பறித்து விட்டதாக தோன்றலாம். ஆனால் உண்மையில் தீப்பெட்டி தொழிலாளர்களின் வேலையை பறித்தது சீன லைட்டர்கள் தான். சீன லைட்டரால் தீப்பெட்டியின் மவுசு குறைய அதனால் ஏற்பட்ட நஷ்டம் காரணம் பல தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்பட்டது. சில தொழிற்சாலைகள் இயந்திரமயமாக்களுக்கு தள்ளப்பட்டது. தற்போது அதிலும் தீப்பெட்டி தொழில் சவாலை சந்தித்து வரும் நிலையில், தீப்பெட்டி தொழிலாளர்கள் தொடர்ந்து லைட்டரை தடை செய்ய கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசு லைட்டருக்கு தடை விதித்தது. அரசின் இந்த நடவடிக்கை தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு சிறிய நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.