அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பை விட கூடுதல் வாக்குகளை ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் பெறுவார் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது கமலா ஹாரிஸ் பின்தங்கியிருந்த நிலையில், படிப்படியாக ஆதரவு அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க செவ்வாய்க்கிழமை நடைபெறும் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களமிறங்கியுள்ளார்.
தொடக்கத்தில் டிரம்ப்பை எதிர்த்து களமிறங்கவிருந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன், போட்டியிலிருந்து ஜூலை 21-ல் விலகினார். துணை அதிபர் கமலா ஹாரிஸை வேட்பாளராக அறிவித்தார். அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் இருந்தபோது, கருத்துக்கணிப்புகளில் டிரம்ப்பைவிட பின்தங்கியிருந்தார்.
அதன்பிறகு, வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதும், கமலா ஹாரிஸ் பின்தங்கிய நிலையிலேயே இருந்தார். அதாவது, ஜூலை 21-ஆம் தேதி, டிரம்புக்கு ஆதரவாக 45 சதவீத வாக்காளர்களும், ஹாரிஸுக்கு ஆதரவாக 43 சதவீதம் பேரும் இருந்தனர். இது ஜூலை 31-ஆம் தேதி 44 சதவீதம், 43 சதவீதம் என மாறியது.
Also Read :
டிரம்ப், ஹாரிஸ்.. யார் வென்றால் இந்தியாவுக்கு நன்மை!
அதன்பிறகு, கமலா ஹாரிஸுக்கு படிப்படியாக ஆதரவு அதிகரித்தது. கடந்த ஒன்றாம் தேதி நிலவரப்படி கமலா ஹாரிஸுக்கு 48 சதவீதம் பேரும், டொனால்டு டிரம்புக்கு 47 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட மாகாணங்கள், குறிப்பிட்ட கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிக்கும் நிலையில், 7 மாகாணங்களில் மட்டும் மக்கள் மாறி மாறி வாக்களிப்பார்கள். இந்த மாகாணங்களே புதிய அதிபரை தேர்வுசெய்வதில் முக்கிய பங்கு வகிக்க உள்ளன. இவற்றில் வேட்பாளர்களுக்கான ஆதரவு நிலை மாறி உள்ளது.
தற்போதைய நிலையில், அரிசோனா, ஜார்ஜியா, வடக்கு கரோலினா மாகாணங்களில் டிரம்புக்கு 49 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரம், மிச்சிகன், விஸ்கான்சின் மாகாணங்களில் ஹாரிஸுக்கு 49 சதவீதம் பேர் ஆதரவாக உள்ளனர். நெவேடா, பெல்சில்வேனியா மாகாணங்களில் இருவருக்கும் 48 சதவீதம் பேர் ஆதரவு தெரிவிப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
.