இலங்கையர் என்ற குறிக்கோளுடன், பிளவுபடாமல் செயற்படுவதன் மூலம் ஒரு நாடாக முன்னேற முடியும். வளமான நாடாக அழகான வாழ்க்கையை உருவாக்க தேசிய ஒருங்கிணைப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தெரிவித்தார்.
தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சராக பதவியேற்றுள்ள முனீர் முழப்பர் நேற்று (28) காலை ராஜகிரிய புத்கமுவ வீதியில் உள்ள தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சு அலுவலகத்தில் கடமைகளை ஆரம்பித்தார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், இனங்களுக்கிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முக்கியமான பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் பதவியை வழங்கியமைக்காக ஜனாதிபதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போதைய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட ஆணைக்குள் அனைவரும் இலங்கையர்கள் என்ற உணர்வு ஏற்படுத்தப்பட்டது. இனக்குழுக்களாகப் பிரிக்கப்படாமல் இலங்கையர் என்ற நோக்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் நாம் ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல முடியும். மத நல்லிணக்கம் தேசிய ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்வது ஒரு பொறுப்பாக கருதப்பட வேண்டும்.
இலங்கையர் என்ற உணர்வு கடந்த காலத்தில் மக்களிடம் இருந்து வெகுதொலைவில் இருந்தது. கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது பற்றிய உண்மையை கண்டறியும் பொறுப்பு நமக்கு உள்ளது. உண்மையைத் தேடி நீதி வழங்க வேண்டும்.
தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்ப நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை உருவாக்கும் பணியில் ஊடகங்களுக்கு பெரும் பொறுப்பு இருப்பதாகவும், வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும்
கட்டியெழுப்புவதற்கு தேசிய ஒருமைப்பாடு மிகவும் முக்கியமானது எனவும் பிரதி அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
அனைத்து மதத் தலைவர்களும் ஆசிர்வாதம் வழங்கியதுடன் , நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, மேலதிக செயலாளர் (நிர்வாகம்) ரோஹன ஹபுகஸ்வத்த, நீதி அமைச்சு
மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு மேலதிக செயலாளர் (தேசிய ஒருமைப்பாடு) ) யு. குகநாதன் மற்றும் அமைச்சு அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
The post இலங்கையர் என்ற குறிக்கோளுடன் நாம் பிளவுபடாமல் செயற்படுவோம் appeared first on Thinakaran.