நடிகை ஷில்பா ஷெட்டி, தொழிலதிபரும் நடிகருமான ராஜ் குந்த்ராவை 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்த ராஜ் குந்த்ரா மனைவி ஷில்பா ஷெட்டியுடன் மும்பை சாந்தாகுரூஸ் பகுதியில் வசித்து வருகிறார். அங்கு இன்று (நவ.19) காலை 6 மணிக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். அப்போது, ஆபாச பட வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக சோதனை செய்வதாக தெரிவிக்கப்பட்டது.
வெப் சீரிஸ் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றி ஆபாசப் படங்கள் எடுத்ததாகவும், இதற்காக தனியாக செல்போன் செயலியை தயாரித்து, அதில் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்ததாகவும் ராஜ் குந்த்ரா உள்பட 11 பேர் மீது மும்பை காவல்துறையினர் கடந்த 2021ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம், பெண்களை ஆபாசமாக சித்தரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு குந்த்ரா வீட்டில் சோதனையிட்டபோது, குந்த்ரா மற்றும் ஷில்பா ஆகிய இருவரும் இணைந்து வங்கியில் வைத்திருந்த கணக்கு விவரங்களும், அதில் பல கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை நடந்த விவரங்களும் தெரிய வந்தன.
இது தொடர்பாக கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதத்தில் இரு வழக்குகளை பதிவு செய்த காவல்துறையினர், குந்த்ராவுக்கு எதிராக குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தனர். விசாரணை நடைபெற்று வந்த நேரத்தில், குந்த்ரா உள்ளிட்டோருக்கு ஜாமீன் கிடைத்தது. இந்த வழக்கு தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது.
இதையும் படிங்க:
முத்தக் காட்சியில் மோசமாக நடந்து கொண்ட நடிகர் – பொதுவெளியில் உண்மையை உடைத்த நடிகை!
அதாவது, ஆபாச படங்களை வெளியிட்ட செல்போன் செயலியின் உரிமையாளர் கென்ரினுடன் குந்த்ரா பேரம் பேசிய வாட்ஸ் ஆப் மெசேஜ்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 119 ஆபாச படங்களை 1.2 மில்லியன் டாலருக்கு விற்க திட்டமிட்டது அந்த வாட்ஸ் ஆப் உரையாடல் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் மும்பை, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து, ஷில்பா ஷெட்டியின் கணவரிடன் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.