உலகில் அதிக எடை கொண்ட பூனையாக அறியப்பட்ட ரஷ்யாவின் க்ரோஷிக் என்ற பூனை கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தது. இந்தப் பூனைக்கு புற்று நோய்க்கான கட்டிகள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த செய்தி உலகம் முழுவதும் உள்ள பூனை பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 38 பவுண்டுகள் (17 கிலோ) எடை கொண்ட 13 வயது க்ரோஷிக் பூனை, நடக்கக்கூட முடியாமல், ரஷ்ய கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தது. அங்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின் காரணமாக அது பல கிலோவரை எடை குறைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த க்ரோஷிக், தின்பண்டங்களை விரும்பி உண்பதற்கு பெயர் பெற்ற பூனையாகும். இதனால் சிறுவயதிலேயே உடல் எடை அதிகரித்து காணப்பட்டுள்ளது. பொதுவாக பூனைகள் சுமார் 4 முதல் 5 கிலோ எடையுள்ளதாக இருக்கும், ஆனால் இந்த க்ரோஷிக் பூனை 17 கிலோ வரை எடை இருந்தது. இந்நிலையில் இந்த பூனையால் நடக்க கூட முடியாத நிலை ஏற்பட்டதால், மேற்கு ரஷ்யாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது.
சமீபத்தில், கால்நடை மருத்துவர்கள், க்ரோஷிக்கிற்கு அல்ட்ராசவுண்ட் செய்ய முயன்றபோது, அது முடியாமல் போயுள்ளது. அதற்கு காரணம் இந்த பூனையின் அதிக கொழுப்பால் ஸ்கேன் சென்சாரால் அதனைக் கடந்து உள்செல்ல முடியாமல் போனது என மருத்துவர்கள் சொல்கின்றனர். அந்த அளவிற்கு பூனையின் உடல் எடை அதிகரித்திருந்தது. இந்நிலையில் ஏழு பவுண்டுகள் எடை குறைத்த நிலையில் அந்த பூனை உயிரிழந்தது.
திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக பூனை இறந்ததாக கூறப்படுகிறது. கூடுதலாக, பூனையின் உடலில் ஏராளமான புற்றுநோய் கட்டிகள் இருப்பதை கால்நடை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இந்த கட்டிகள் ஆனது பூனையின் பல உறுப்புகளை செயலிழக்க செய்திருக்கலாம் என்று பூனைக்கு சிகிச்சை அளித்த பூனை காப்பகத்தின் உரிமையாளர் கலியானா மோர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள் :
சீனாவுக்கு லட்சக்கணக்கில் கழுதைகளை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்.. காரணம் இதுதானா?
பொதுவாக பூனைகள் நோய்வாய்ப்பட்டால், அது அவ்வளவு எளிதில் வெளிப்படுவதில்லை என மருத்துவர் கூறுகின்றார். அல்ட்ராசவுண்ட் செய்ய முடியாவிட்டாலும், பூனைக்கு தகுந்த கவனிப்பு வழங்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
க்ரம்ப்ஸ் (கிரோஷிக்) என்பது ரஷ்ய நீல பூனை இனத்தைச் சேர்ந்தது. இதை பொதுவாக ரஷ்ய நீல பூனைகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த பூனைகள் பல்வேறு நிறங்களிலும், தோலிலும் காணப்படும். ரஷியன் ப்ளூஸ் பொதுவாக நீல நிற கண்கள் கொண்டவை, இதன் காரணமாகவே அவர்களுக்கு ரஷ்ய நீலம் என்று பெயர் கொடுக்கிறது.
.