திருமணம் செய்தால் சினிமா வாய்ப்புகள் பறிக்கப்படும் என்று, முன்னணி தயாரிப்பாளர்கள் தன்னை எச்சரித்ததாக நடிகை மானசி பரேக் குற்றம் சாட்டியுள்ளார். தேசிய விருது வென்ற நடிகை மிரட்டப்பட்டதற்கு காரணம் என்ன?
தமிழில் ‘லீலை’ என்ற படத்தில் நடித்தவர் குஜராத்தி நடிகை மானசி பரேக். இந்தப் படத்தை விட, அதில் வரும் ‘ஒரு கிளி ஒரு கிளி’ பாடல் மூலம் கவனம் ஈர்த்தார். ஹிந்தி, குஜராத்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான இவர், சினிமாவில் சாதிப்பதற்கு திருமணம் தடையாக இருந்ததா என்று கேள்விக்கு, அளித்துள்ள பதில், பேசுபொருளாகியுள்ளது.
மாடல், நடிகை, பாடகி என பன்முகத்தன்மை கொண்ட மானசி, தொடக்கத்தில் தொலைக்காட்சித் தொடர் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார். இதையடுத்து, கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘லீலை’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
பின்னர் 2019 ஆண்டு வெளியான ‘உரி, தி சர்ஜிகல் ஸ்ட்ரைக்’ (‘Uri The Surgical Strike’) படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து குஜராத்தி படங்களில் நடித்து வரும் மானசி, ‘கட்ச் எக்ஸ்பிரஸ்’ (‘Kutch Express’) படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இதனிடையே, இசையமைப்பாளர் பார்த்திவ் கோஹிலை கரம் பிடித்தார்.
ஆனால், சினிமாவில் வளர்ந்து வரும் போது திருமணம் செய்ய வேண்டாம் என்று முன்னணி தயாரிப்பாளர்கள் தன்னை அச்சுறுத்தியதாக மானசி பரேக் தெரிவித்துள்ளார். திருமணமானால் உடல் பருமனாகி விடும் என்றும், அதனால் சினிமா வாய்ப்புகள் கையை விட்டுப் பறிபோகும் எனவும் எச்சரித்ததாகக் கூறியுள்ளார்.
மேலும், வளர்ந்து வரும் நேரத்தில் திருமணம் செய்தால், சரிவை சந்திக்க நேரிடும் எனவும் கூறிப் பீதியைக் கிளப்பியதாகவும் தெரிவித்துள்ளார். இருந்த போதும், தயாரிப்பாளர் மற்றும் சக நடிகை, நடிகர்கள் கூறியதைப் பொய்யாக்கும் வகையில் திருமணத்திற்குப் பின்னரே தான் சாதித்துக் காட்டியதாவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் சாதிக்க வயது தடையில்லை என்பதை உணர்த்தும் வகையில் 40 வயது கடந்தும் முத்திரை பதித்து வரும் மானசி, மற்ற நடிகைகளுக்கு முன் உதாரணமாகத் திகழ்கிறார்.
.