ரஷ்யாவுக்கு செல்ல விரும்பும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு உற்சாகமான செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. தற்போது இந்தியர்கள் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என்ற சூழல் இருக்கும் நிலையில், ரஷ்யாவிற்கும் விரைவில் இந்தியர்கள் விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மாஸ்கோ நகர சுற்றுலா குழுவின் (Moscow City Tourism Committee) தலைவரான எவ்ஜெனி கோஸ்லோவ் பேசுகையில் இந்தியப் பயணிகள் விசா இல்லாமல் ரஷ்யாவுக்கு செல்ல அனுமதிக்கும் புதிய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி அமலுக்கு வந்தால், இந்தியாவில் இருந்து மாஸ்கோ வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுக்கும் என்றார்.
ஏற்கனவே இந்தியாவில் இருந்து ரஷ்யாவிற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருக்கும் நிலையில், இந்த ஒப்பந்தம் மாஸ்கோவிற்கு இன்னும் அதிகமான இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கோஸ்லோவ் குறிப்பிட்டார். அறிக்கைகளின்படி, 2024-ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டுமே சுமார் 28,500 இந்திய சுற்றுலாப் பயணிகள் ரஷ்ய தலைநகரான மாஸ்கோவிற்கு சென்றுள்ளனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது1.5 மடங்கு அதிகமாகும். இந்த வளர்ச்சியானது ரஷ்ய சுற்றுலாவில் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆர்வம் அதிகரித்திருப்பதை வெளிப்படுத்துகிறது.
மாஸ்கோவின் சுற்றுலா குழுவிற்கும், பிரபல ரஷ்ய ஏர்லைன் நிறுவனமான ஏரோஃப்ளோட்டிற்கும் இடையிலான பார்ட்னர்ஷிப் மூலம் “Russian Holidays: From the Capital of Russia to the Capital of Siberia” என்ற பயண திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் மாஸ்கோ நகரின் துடிப்பான ஆற்றலை சைபீரியாவின் இயற்கை அழகுடன் சேர்த்து காட்சி விருந்தளிக்கிறது. மேலும் இந்த திட்டம் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
ரஷ்யா இ-விசாவை அறிமுகம் செய்திருப்பதன் மூலம், ஏற்கனவே இந்திய சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்வதை எளிதாக்கியுள்ள நிலையில் விசா இல்லாத பயணம் இன்னும் பெரிய ஊக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ்கோவின் வரலாறு, கிரெம்ளின், ரெட் ஸ்கொயர் மற்றும் செயின்ட் பசில்ஸ் கதீட்ரல் போன்ற பிரபலமான வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் கலாச்சாரங்கள் பல ஆண்டுகளாகவே ரஷ்யாவை நோக்கி உலக பயணிகளை ஈர்த்து வருகின்றன.
இதையும் படியுங்கள் :
GK | உலகின் மற்ற நாடுகளை விட 8 ஆண்டுகள் பின்தங்கியுள்ள நாடு எது தெரியுமா?… தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
இந்த நிலையில் இந்தியர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட உள்ள விசா-ஃப்ரீ பயணம் இந்தியா-ரஷ்யா ஆகிய 2 நாடுகளின் சுற்றுலா உறவுகளில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்துவதோடு இரு நாடுகளுக்கு இடையிலான கலாச்சார பரிமாற்றம் மற்றும் ஆய்வுக்கு மேலும் அதிக வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.