ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து இஸ்ரேல் மீது கடந்த ஒன்றாம் தேதி ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இஸ்ரேல், உரிய நேரத்தில் ஈரானுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. டெஹ்ரான் மற்றும் சுற்றுவட்டார நகரங்களில் அதிகாலையில் அடுத்தடுத்து ஏழு முறை வெடி சத்தம் எழுந்தது. இதைத்தொடர்ந்து ஈரான் நாட்டின் வான் எல்லைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. ஈரான் வான் வழியாக இயக்கப்பட இருந்த சர்வதேச விமானங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
இதையும் படிக்க:
“கனடா இந்தியாவிற்கு சாதகமாக இல்லை” – நியூஸ் 18 செய்தி குழுமம் நடத்திய சர்வேயில் 33% பேர் கருத்து!
ஈரானில் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ராணுவ அதிகாரிகளுடன் இணைந்து தாக்குதல் நிகழ்வுகளை கண்காணித்தார். ஈரான் மற்றும் அதன் ஆதரவு நாடுகள் மீது தாக்குதல் நடத்த தங்களுக்கு முழு உரிமை இருப்பதாகக் கூறியுள்ள இஸ்ரேல், தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் முழு அளவில் தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் ஏவுகணைகளை தாக்கி அழித்திருப்பதாக இரான் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் “ஐயன் டோம்”மிற்கு இணையான “பவர்” என்ற ஏவுகணை தடுப்பு அமைப்பை பயன்படுத்தி இரான், இஸ்ரேல் ஏவுகணைகளை தடுத்துள்ளது.
கடந்த வாரம், ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை ஆவணங்கள் வெளியாகின. இஸ்ரேலின் பதிலடியை அதிகரிக்க அனுமதிக்கக் கூடாது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோனி பிளிங்கன் புதன்கிழமை தெரிவித்தார். மேலும் ஈரான் மீதான இன்றைய தாக்குதலில் தங்களுக்கு தொடர்பு இல்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
.