ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக பதவி ஏற்க இருந்த ஹசீம் சபிதீனும் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், அந்த அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதனைத்தொடர்ந்து அந்த அமைப்பின் மூத்த தலைவரும், நஸ்ரல்லாவின் உறவினருமான ஹசீம் சபிதீன் ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், பெய்ரூட்டில் கடந்த 4 ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் சபிதீன் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.
இது குறித்து ஹிஸ்புல்லா அமைப்பு எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் சபிதீன் உயிரிழந்துவிட்டதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது. இதையடுத்து, ஹிஸ்புல்லா அமைப்பின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், ரோம் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆஸ்டின், “ஹமாஸுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின்போது பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை இஸ்ரேல் உறுதி செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அதனை செய்யத் தவறினால், இஸ்ரேலுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடும் என்றும் ஆஸ்டின் எச்சரித்தார்.
.