பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சிமாநாடு ரஷ்யா தலைமையில் நடைபெறுகிறது.
ரஷ்யாவில் உள்ள காசான் நகரில் இன்றும், நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, ரஷ்யாவுக்கு இன்று காலை புறப்பட்டுச் சென்றார். அதன்படி ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு விமானநிலையத்தில் ரஷ்ய அரசு சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் ஹோட்டலுக்கு வந்த பிரதமருக்கு இந்திய தேசிய கொடிகளை ஏந்தியும், சமஸ்கிருத பாடல்களை பாடியும் அங்குள்ள இந்தியர்கள் வரவேற்பு அளித்தனர். பாரம்பரிய இந்திய ஆடைகள் அணிந்த ரஷ்ய கலைஞர்கள், தங்கள் நடன நிகழ்ச்சி மூலம் வரவேற்றனர்.
இதனைத்தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தனிப்பட்ட ஆலோசனையில் ஈடுபட்டார். பிராந்தியத்தில் அமைதி திரும்பவும் நிலைத்தன்மை ஏற்படவும் இந்தியா முழு ஆதரவு அளிப்பதாக ரஷ்ய அதிபரிடம் பிரதமர் தெரிவித்தார். ரஷ்யா-உக்ரைன் பிரச்னை அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இதையும் படியுங்கள் :
BSNL Logo: பிஎஸ்என்எல் லோகோ, டேக்லைன் மாற்றம்.. 7 புதிய திட்டங்கள் அறிமுகம்!
இதேபோன்று சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேச உள்ளார். இந்தியா – சீனா இடையே எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் ரோந்து செல்ல ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பிரதமர் மோடி – ஜின்பிங் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
.