இந்தியா நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது .
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. முதல் போட்டி பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் கடுமையான மழை பெய்தது. இதனால் 5 நாட்கள் கொண்ட போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடக்கவுள்ள நிலையில் காலை 8.45 மணிக்கு டாஸ் போடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று பெங்களூருவில் மழை குறைந்த நிலையில், சொன்னபடி, காலை 8.45 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணிக் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்தார்.
இந்த முடிவுக்கு காரணமாக ஆடுகளத்தை குறிப்பிட்டார். மழை அச்சுறுத்தல் மற்றும் மைதானம் ஈரப்பதத்துடன் இருக்கலாம் என்பதால், விரைவாக ரன்கள் குவிக்க ஏதுவாக முதலில் பேட்டிங் செய்வதாக ரோகித் சர்மா தெரிவித்தார்.
மழை காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியதை போன்று இன்றும் இந்திய அணி விளையாடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப ரோகித் சர்மாவும் பேட்டியும் ரன்கள் குவிப்பை மையப்படுத்தியே இருந்தது.
இதற்கிடையே, ஆடும் லெவனில் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஷுப்மன் கில்லுக்கு பதிலாக சர்ப்ராஸ் கானும், ஆகாஷ் தீப்பிறகு பதிலாக குல்தீப் யாதவும் அணியில் சேர்க்கப்பட்டனர்.
இந்திய அணி விவரம்: ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், விராட் கோலி, சர்பராஸ் கான், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
நியூசிலாந்து அணி விவரம்: டாம் லாதம், டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளூன்டெல், க்ளென் பிலிப்ஸ், மாட் ஹென்றி, டிம் சவுத்தி, அஜாஸ் படேல், வில்லியம் ஓரூர்கே.
.