இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஒருவர், குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகரின் அரச வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவர் வேறு யாருமல்ல.. இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தான். அஜய் ஜடேஜா 1992 முதல் 2000 வரை இந்தியாவுக்காக 196 ஒருநாள் மற்றும் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர். இவரது தந்தை தௌலட்சின்ஜி ஜடேஜா, குஜராத்தின் ஜாம் நகர் மக்களவைத் தொகுதியில் மூன்று முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர். இவரது தாய் கேரளாவின் ஆலப்புழாவைச் சேர்ந்தவர். ஜடேஜாவின் மனைவி அதிதி ஜெட்லி, சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லியின் மகளாவார்.
அரச குடும்பம் பின்னணியைக் கொண்ட அஜய் ஜடேஜா, ஜாம்நகரின் அரச சிம்மாசனத்தின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அஜய் தனது வாரிசாக வருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக நவாநகரைச் சேர்ந்த ஜாம் சாஹேப்பான சத்ருசல்யாசின்ஹ்ஜி ஜடேஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எழுதி உள்ள கடிதத்தில், ஜாம்நகருக்கு சேவை செய்யும் பொறுப்பை அஜய் ஜடேஜா ஏற்றுக்கொண்டது இம்மக்களுக்கு வரப்பிரசாதம் என்று தெரிவித்துள்ளார்.
சத்ருசல்யாசின்ஹ்ஜி அஜய் ஜடேஜாவின் தந்தை வழி உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read |
சம்பவம் செய்த சஞ்சு சாம்சன்… வங்கதேசத்திற்கு எதிரான டி20-யில் இந்திய அணி 297 ரன்கள் குவிப்பு
ஜாம்நகர் அரச குடும்பத்துக்கும் கிரிக்கெட்டுக்கும் இடையேயான பிணைப்பு தலைமுறை தலைமுறையாக உள்ளது. ஜாம்நகர் அரசர்களான ஜாம் ரஞ்சித்சிங் மற்றும் ஜாம் துலீப் இருவரும், இந்திய கிரிக்கெட்டுக்கு முன்னோடிகள்.
இவர்கள் பெயரில் தான் ரஞ்சி டிராபி , துலீப் டிராபி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தப் பரம்பரையில் வந்த அஜய் ஜடேஜா இப்போது அரச வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
.