– முதல் 2 நாட்களுக்கு அரச கொள்கைப் பிரகடனம் விவாதம்
– இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு: தீர்மானம் டிசம்பர் 05 இல்

பாராளுமன்றம் நாளை (03) செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) வரை கூடுகின்றது.

2024 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய எம்.பிக்கள் பங்குபற்றிய 10ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு கடந்த நவம்பர் 21ஆம் திகதி வைபவரீதியாக இடம்பெற்றதைத் தொடர்ந்து இடம்பெறும் முதலாவது பாராளுமன்ற அமர்வு இதுவாகும்.

சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தலைமையில் கடந்த நவம்பர் 25ஆம் திகதி கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பாராளுமன்றத்தை டிசம்பர் 03 முதல் 06 வரை கூட்டுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்தாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

இதற்கமைய நாளை டிசம்பர் 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி அவர்களினால் அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரடகனம் குறித்த பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை விவாதிக்கப்படவுள்ளது. டிசம்பர் 5ஆம் திகதியும் குறித்த பிரேரணை மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றையதினம் பி.ப 5.00 மணிக்கு வாக்கெடுப்பை நடத்துவதற்கும் கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

டிசம்பர் 05ஆம் திகதி வியாழக்கிழமை எதிர்வரும் 3 மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு வாக்கெடுப்புக் குறித்த தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய டிசம்பர் 05ஆம் திகதி மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை விவாதம் நடத்தப்படவுள்ளது. இது பற்றிய விவாதத்தை 06ஆம் திகதி மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரையும் முன்னெடுக்கவும் இணக்கம் காணப்பட்டது.

மேலும், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கான விவாதிக்கும் நேரத்தை ஒதுக்குவது, குழுக்களில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் அமைப்பை நிர்ணயித்தல், தெரிவுக்குழுவை அமைப்பது மற்றும் இதற்கான பெயர்களை முன்மொழிவது, பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மற்றும் ஏனைய குழுக்களை நியமிப்பது, துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் செயற்பாடுகள், பத்தாவது பாராளுமன்றத்திற்கான பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்தை நியமிப்பதற்கான கோரிக்கையை ஆராய்தல் போன்ற விடயங்கள் குறித்த இங்கு கலந்துரையாடப்பட்டது.

பிரதிச் சபாநாயகர் வைத்தியகலாநிதி மொஹொமட் றிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் வைத்தியகலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

The post பாராளுமன்றம் நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை கூடுகிறது appeared first on Thinakaran.



Source link