உலகிலேயே அதிக கார்கள் யாரிடம் உள்ளது என்பது குறித்து இந்த செய்திகுறிப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில், முன்னணி கோடீஸ்வரர்களின் ஈர்க்கக்கூடிய கார் சேகரிப்பைக் கண்டு வியப்படைகிறோம். ஆனால் உலகெங்கிலும் உள்ள பணக்காரர்கள், நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு அதிக சொகுசு நிறைந்த ஆடம்பர வாகனங்களை வைத்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் புருனேயின் சுல்தானான சுல்தான் ஹசனல் போல்கியா. இவரிடம் கண்ணைக் கவரும் 7,000 சொகுசு கார்கள் உள்ளது. அதுமட்டுமல்ல இவர் உலகின் மிகப்பெரிய கார் சேகரிப்பாளர் என்ற பெருமையையும் பெற்றவர்.
புருனேயைச் சேர்ந்த சுல்தான் ஹசனல் போல்கியாவின் மிகப்பெரிய கார் சேகரிப்பில் 600 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உள்ளன. இதில் பிரிட்டிஷ் வாகன உற்பத்தியாளரின் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட ஒன்று மற்றும் 25 ஃபெராரி கார்களும் உள்ளன. உலகின் மிகப்பெரிய அரண்மனைகளில் ஒன்றில் சுல்தான் மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மொத்தம் 1,788 அறைகள் கொண்ட இந்த அரண்மனையில் ஒரு பெரிய கார் பார்க்கிங்/கேரேஜ் உள்ளது. அங்கு இந்த கார்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த பிரமாண்டமான கேரேஜின் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானபோது சுல்தானின் விரிவான கார் சேகரிப்பு குறித்து பலருக்கும் தெரியவந்தது.
சுல்தான் ஹசனல் போல்கியாவின் சேகரிப்பில் புகாட்டி EB110, ஒரு பென்ட்லி புக்கனீர், ஆறு பென்ட்லி டோமினேட்டர்கள் மற்றும் 1996, ஸ்போர்ட்டி கூபே மாடலான பென்ட்லி புக்கனீர் மற்றும் அவரது திருமண நாளில் பயன்படுத்திய சில்வர் ஸ்பர் II ஆகியவை அடங்கும். இந்த சேகரிப்பில் சுல்தானின் விருப்பப்படி உருவாக்கப்பட்ட பல கார்களும் உள்ளன. அவற்றில் பென்ட்லி கேம்லாட், பீனிக்ஸ், இம்பீரியல், ரேபியர், பெகாசஸ், சில்வர்ஸ்டோன் மற்றும் ஸ்பெக்டர் ஆகியவை அடங்கும். புருனேயின் அரச குடும்பம் 380 பென்ட்லி காரை வைத்திருக்கிறது. ஆனால் சுல்தானுக்கு ரோல்ஸ் ராய்ஸ் மீது தனி விருப்பம் இருப்பதாகத் தெரிகிறது. ஏனெனில் அவரது சேகரிப்பில் தங்க முலாம் பூசப்பட்ட ஒன்று உட்பட மொத்தம் 600 ரோல்ஸ் ராய்ஸ்கள் உள்ளன.
சுல்தானின் ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் சேகரிப்பில், மெஜஸ்டிக் மற்றும் கிளவுடெஸ்க் போன்ற ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் ஸ்பெஷல் வேரியண்டுகளும் உள்ளன. புருனேயைச் சேர்ந்த சுல்தான் ஹசனல் போல்கியா உலகின் மிகப்பெரிய கார் சேகரிப்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதன் மதிப்பு எப்படியும் 5 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டாலும், அவர் இந்திய பில்லியனர்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோரை விட பணக்காரர் அல்ல.
சுல்தான் ஹசனல் போல்கியா 1967-ம் ஆண்டிலிருந்து புருனேயை ஆட்சி செய்து வருகிறார். அதுமட்டுமின்றி 1984-ல் இங்கிலாந்து நாட்டிடம் சுதந்திரம் பெற்றதில் இருந்து நாட்டின் பிரதமராகவும் ‘பணியாற்றி’ வருகிறார். சுல்தானின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் $30 பில்லியன் ஆகும். இது இந்திய தொழில் அதிபர்களான முகேஷ் அம்பானியின் $101.6 பில்லியன் மற்றும் கௌதம் அதானியின் $66 பில்லியன் சொத்து மதிப்பை விடக் குறைவுதான்.
.