உலகளவில் முக்கிய உணவுப் பயிராக இருக்கும் உருளைக்கிழங்கை காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளிலிருந்து பாதுகாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அதிக வெப்பநிலையில் வெளிப்படும்போது உருளைக்கிழங்கின் விளைச்சல் குறைவாக இருப்பதாக பெய்ஜிங்கில் உள்ள சர்வதேச உருளைக்கிழங்கு மையத்தின் (சிஐபி) கீழ் நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன.
எதிர்கால காலநிலைக் காட்சிகளைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சூழலில் வளர்க்கப்படும் உருளைக்கிழங்குகள், சீனாவில் உள்ள வழக்கமான வகைகளை விட பாதிக்கும் குறைவான எடையுடன் இருப்பது கண்டறியப்பட்டது. காலநிலையை புரிந்துக்கொள்ளக்கூடிய உத்திகளை உடனடியாக எடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம் என்பதை இந்த ஆராய்ச்சி முடிவுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
Climate Smart Agriculture என்ற இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு, மூலக்கூறு உயிரியலாளர் லீ ஜிப்பிங் தலைமையிலான மூன்று ஆண்டு திட்டத்தை விவரிக்கிறது. ஹெபெய் மற்றும் இன்னர் மங்கோலியாவில் தற்போதைய சராசரியை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமான வெப்பநிலையில் பயிரிடப்பட்ட உருளைக்கிழங்கின் விளைச்சல் 50 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளது. மேலும் உருளைக்கிழங்கின் அளவு மற்றும் எடை குறைந்துள்ளதால், உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கு உற்பத்தியாளரான சீனாவில் எதிர்கால உணவுப் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காலநிலை சவால்கள்:
இன்னர் மங்கோலியாவில் உள்ள விவசாயிகள் ஏற்கனவே காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் கண்டு வருகின்றனர். குறிப்பாக ஒழுங்கற்ற மழைப்பொழிவு அறுவடைகளை தாமதப்படுத்துவதோடு பயிர் நோய்களை அதிகரிக்கிறது. முக்கியமாக இந்த ஆண்டு கனமழையால் அறுவடை முயற்சிகள் கணிசமாகக் குறைந்துள்ளன. மேலும் சூடான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலையில் அதிகரிக்கும் நோய் தாக்குதல், பாரம்பரிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு மிகவும் எதிர்ப்புத் தெரிவிக்கிப்பதாக உருளைக்கிழங்கை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் கூறுகின்றன.
தீர்வுகளை உருவாக்குதல்:
இந்த சவால்களை எதிர்கொள்ள, சீன ஆராய்ச்சியாளர்கள் வெப்பத்தை தாங்கும் மற்றும் நோயை எதிர்க்கும் சக்தியுள்ள உருளைக்கிழங்கு வகைகளை உருவாக்க ஏரோபோனிக்ஸ் மற்றும் மரபணு ஆய்வுகள் போன்ற மேம்பட்ட நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். பெய்ஜிங்கின் யான்கிங்கில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிலையத்தில், தொழிலாளர்கள் கட்டுப்படுத்தப்பட்ட நிலைமைகளின் கீழ் உருளைக்கிழங்கு செடிகளைப் பரப்புவதாகக் கூறப்படுகிறது. மகசூல் இழப்பைக் குறைக்க அடுத்த பத்தாண்டுகளுக்குள் நடவுப் பருவங்களை மாற்றுவது மற்றும் அதிக உயரமான இடங்களில் பயிரிடுவது உள்ளிட்ட விவசாய நடைமுறைகளில் மாற்றங்கள் தேவைப்படலாம் என்று ஆயவாளர்கள் தெரிவித்தனர்.
உலகளவில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால், விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் உருளைக்கிழங்கு விலை இரண்டும் கடுமையாக பாதிக்கப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
.