பாகிஸ்தானில் உள்ள முக்கிய பகுதியான கராச்சி ஜின்னா விமான நிலையத்தின் வெளியே நேற்று (6ம் தேதி) இரவு 11 மணி அளவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்தக் குண்டு வெடிப்பில், சீனாவைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 11 பேர் வரை காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின், கராச்சி பகுதியில் அமைந்துள்ள ஜின்னா விமான நிலையத்தின் வெளியே உள்ள முக்கிய சாலையில் நேற்று இரவு வழக்கம் போல் வாகனங்கள் சென்றுவந்திருந்தன. இந்த சமயத்தில் இரவு 11 மணி அளவில் அந்த சாலையில் இருந்த ஒரு வாகனம் பலத்த சத்தத்துடன் வெடித்தது. பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து சம்பவம் நடந்ததும், அந்த இடம் முழுக்க பதற்றமான சூழல் ஏற்பட்டது.
மேலும், அந்த சாலை முழுக்க கரும்புகை சூழ்ந்தது. உடனடியாக, அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் வெடிவிபத்து நடந்த பகுதியை தங்கள் கட்டுபாட்டு வளையத்திற்குள் கொண்டுவந்து அந்த சாலையில், போக்குவரத்தை நிறுத்தினர். மேலும், மீட்பு பணிகளையும் துரிதபடுத்தினர்.
பலூச் லிபரேஷன் ஆர்மி (பிஎல்ஏ அல்லது பலுசிஸ்தான் விடுதலைப்படை) எனும் பிரிவினைவாத குழு இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு, சீன பொறியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கான்வாய் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் என்று கூறியுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள சீன தூதரகம், சீன மின்சார சக்தி நிறுவனத்தைச் சேர்ந்த நபர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “இந்த நிகழ்வு வன்மையாக கண்டிக்கத்தக்கது. சீனத் தலைமைக்கும், சீன மக்களுக்கும் இதயப்பூர்வமான இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் :
இஸ்ரேல் – காசா போர்; ஒரு வருடத்தில் உருத்தெரியாமல் அழிந்த சோகம்!
பாகிஸ்தானில் சீனர்களை குறிவைத்து நடத்தப்பட்ட வெடி குண்டு தாக்குதலில் இரு சீனர்கள் பலியாகி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.