இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதேசமயம், இந்தத் தாக்குதல் சம்பங்களில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு மறைமுக உதவி செய்துவருவதாக தொடர்ந்து இஸ்ரேல் குற்றம்சாட்டிவந்த நிலையில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலை இஸ்ரேல் அரசு நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு கருத்து தெரிவித்திருந்த நிலையில், சமீபத்தில் லெபனான் மீது வான் வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொன்றது. இதனையடுத்து ஈரான், இஸ்ரேல் மீது நேற்று 184 ஏவுகணைகளை வீசி பயங்கர தாக்குதலை நடத்தியது.
அதன்படி, இஸ்ரேல் மீது சுமார் 200 ஏவுகணைகளை வீசிய ஈரான், 3 முக்கிய விமானப்படை தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்ய அமெரிக்கா பயன்படுத்தும் முக்கிய விமானத்தளமான நெவாடிம் என்ற இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் :
இஸ்ரேல் vs ஈரான்.. யாரிடம் ராணுவம் பலம் அதிகம் தெரியுமா..?
நெவாடிம் விமானப்படைத்தளத்தில் அமெரிக்காவின் F-35 போர் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதே போன்று, ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸரல்லாவை கொல்வதற்கு பிரதான காரணமாக இருந்த ஹாட்ஜெரிம் என்ற விமானப்படை தளத்தை குறி வைத்தும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
அனைத்திற்கும் மேலாக, உலகின் சக்திவாய்ந்த உளவு அமைப்பாக கருதப்படும் மொசாட் தலைமையகத்தை குறி வைத்தும் ஈரானில் இருந்து ஏவுகணைகள் வீசப்பட்டன. இந்நிலையில், மொசாட் மற்றும் விமானப்படை தளங்களை குறி வைத்து ஈரான் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
.