தென் கொரியா ஜனாதிபதி யூன் சுக் யோல், மார்ஷல் சட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.
தென் கொரியா ஜனாதிபதி யூன், எதிர்க்கட்சிகள் நாட்டின் நிர்வாகத்தை குறுக்கீடு செய்வதாகவும், வட கொரியாவுடன் ஒத்துழைப்பதாகவும், எதிர்நிலைச் செயல்பாடுகளை ஊக்குவிப்பதாகவும் குற்றம் சாட்டி, நேற்று (03.12.2024) ‘அவசர மார்ஷல் சட்டத்தை’ அமல்படுத்துவதாக அறிவித்தார். அதிபரின் இந்த அறிவிப்பு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு உடனடியாக ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். மார்ஷல் சட்டத்தின் கீழ், அதிபர் யூன் ஆர்ப்பாட்டங்களையும் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளையும் தடை செய்ய முயற்சித்தார். மேலும், ஊடகங்களை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிட்டார். இது தென் கொரியாவில் மிகப்பெரிய அரசியல் குழப்பமாக மாறியது. யூனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் வெளியே போராட்டக்காரர்கள் கூடினர், அங்கு தென் கொரிய இராணுவம் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் மோதியது.
இதையும் படிக்க:
அன்று துணை முதலமைச்சர்.. இன்று காவலர்.. தண்டனையால் பாத்திரம் கழுவிய முன்னாள் அமைச்சர்கள்!
மார்ஷல் சட்டத்தை திரும்பப் பெற்ற நாடாளுமன்றம்:
மார்ஷல் சட்டத்தை அறிவித்த பிறகு, நாடாளுமன்றம் உடனடியாக கூடியது. 190 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் யூனின் முடிவுக்கு எதிராக வாக்களித்தனர். சபாநாயகர் வூ வொன் ஷிக், இந்த சட்டம் “சட்டரீதியாக செல்லாது” என்றும் “மக்களுடன் மக்களாட்சியை காப்போம்” என அறிவித்தார். அந்நாட்டில், அதிகாலை 4:30 மணிக்கு, இந்த மார்ஷல் சட்டத்தை திரும்ப பெறுவதாக அதிபர் யூன் அறிவித்தார்.
ஜனாதிபதிக்கு மீது பதவி நீக்க நடவடிக்கைகள்?
மார்ஷல் சட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவிப்புக்கு பிறகு, போராட்டக்காரர்கள் உற்சாகமாக கைகொட்டி, “நாம் வென்றோம்!” என கோஷமிட்டனர். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி, அதிபர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியது.
“ஜனாதிபதி யூன் சுக் யோலின் மார்ஷல் சட்ட அறிவிப்பு அரசியலமைப்புக்கு முற்றிலும் எதிரானது. இது சட்டரீதியான எந்த நிபந்தனைகளையும் பின்பற்றவில்லை,” என ஜனநாயக கட்சி தெரிவித்தது. மேலும், “இது மிகப் பெரிய அரசியல் துரோகம். இது அதிபரின் பதவி நீக்கத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளது” என்று அவர்கள் கூறினர்.
300 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை வைத்துள்ள ஜனநாயக கட்சி, கடந்த 2022 ஆம் ஆண்டு பதவியேற்ற யூனின் நிர்வாகத்திற்கு தொடர்ந்து தடையாக இருந்து வருகிறது.
அமெரிக்காவின் பதில்:
இந்நிலையில், தென் கொரியாவின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா, அதிபர் யூன் மார்ஷல் சட்டத்தை திரும்பப் பெற்றதை வரவேற்றுள்ளது.
கடந்த 1980 ஆம் ஆண்டு மாணவர்களும் தொழிற்சங்கங்களும் முன்னின்று நடத்திய போராட்டத்தின் போது, மார்ஷல் சட்டம் கடைசியாக பயன்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1980-களின் இறுதியில் தென் கொரியா முழுமையான ஜனநாயக நாடாக மாற்றம் கண்டது. தற்போது, அதிபர் யூனின் எதிர்காலம் பாதிக்கப்பட்ட நிலையில், அரசியல் தென் கொரியா அரசியலில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.
.