தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக, வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது.
ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழை பல்வேறு மாவட்டங்களை புரட்டிப்போட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக சேதமடைந்துள்ளது. கனமழை மற்றும் சாத்தனூர் அணை திறப்பு உள்ளிட்டவற்றால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து செய்வதறியாது இருக்கின்றனர்.
அதுமட்டுமன்றி திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபமலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை திடீரென மண் சரிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். இப்படி ஃபெஞ்சல் புயல் வட தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு முகாம்கள் அமைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் மற்றும் மருத்துவ தேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் துணை முதலமைச்சரை நேரில் சந்திந்து ரூ. 10 லட்சம் காசோலை வழங்கியுள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன் படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் போரில் வீர மரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவத்தை ஒட்டி எடுக்கப்பட்டது. இதற்காக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திந்து படக்குழு பாராட்டு பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஃபெஞ்சல் புயலுக்காக இதுவரை எந்த நடிகரும் நிதி உதவி அளிக்க முன்வராத நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் முன்வந்து நிதி கொடுத்திருப்பது பாராட்டுக்குறிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவு போட்டிருக்கிறார்.
Also Read |
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு சிறுநீரக பாதிப்பு… சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி
அதில், ”ஃபெஞ்சல் புயல் – கனமழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு திரைப்பட நடிகர் சகோதரர் @Siva_Kartikeyan ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும் “. என்று கூறியுள்ளார்.
.