புஷ்பா 2 படத்தை பார்ப்பதற்காகச் சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி பெண்மணி இறந்த நிலையில், மனைவியின் இழப்பைத் தாங்க முடியவில்லை என்று அவரது கணவர் பாஸ்கர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜுனின் புஷ்பா-2 திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணிக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. இதனை காண, ஹைதராபாத்தில் சிக்கட்பள்ளி என்ற இடத்தில் உள்ள திரையரங்கம் ஒன்றில் ஏராளமான ரசிகர்கள் குடும்பத்துடன் குவிந்தனர். அப்போது, புஷ்பா-2 படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன், முன்னறிவிப்பின்றி திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றதாக கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுனின் வருகையை அறிந்த ரசிகர்கள், திரையரங்கிற்குள் முண்டியடித்துக் கொண்டு நுழைந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், கணவர் மற்றும் மகனுடன் சென்ற 35 வயது மதிக்கத்தக்க ரேவதி என்கிற பெண் மயங்கி விழுந்தார்.
மயங்கி விழுந்த ரேவதிக்கு சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ரேவதி உயிரிழந்தார். ரேவதியின் மகனும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே தான், மனைவியின் இழப்பைத் தாங்க முடியவில்லை என்று உயிரிழந்த ரேவதியின் கணவர் பாஸ்கர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், தனது மகன் அல்லு அர்ஜுனின் தீவிர ரசிகர் என்றும் மகனின் விருப்பப்படி மனைவி ரேவதி, மகன், மகளுடன் புஷ்பா-2 படம் பார்க்கச் சென்றதாகவும் கூறினார்.
அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வந்ததும் அவரைக் காண கூட்டம் அலைமோதிய நிலையில் தனது மனைவி, மகன் கூட்ட நெரிசலில் சிக்கியதாகத் தெரிவித்தார். மயக்க நிலையில் கிடந்த தனது மகனுக்கு காவல்துறையினர் சிபிஆர் சிகிச்சையளித்து பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறினார்.
மகன் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்ததை வீடியோ காட்சியில் பார்த்தே தெரிந்து கொண்டதாகவும், மனைவியின் இழப்பை தாங்க முடியவில்லை என்றும் பாஸ்கர் வேதனையுடன் தெரிவித்தார்.
.