மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்த அவர்,

பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு மேற்கொண்ட பரிசோதனைகள் மற்றும் ஆய்வின் பிரகாரம், அதிகளவு டெங்கு நோய் பரவக்கூடிய இடங்களாக வீடுகள், அரச மற்றும் அரசு சாரா திணைக்களங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

எனவே இந்த அபாயகரமான சூழ்நிலையில் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அத்துடன், டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தவேண்டுமென வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், எலி காய்ச்சல் அபாயம் இருப்பதால் விவசாயிகளும் வயல் நிலங்களை அண்டி வசிப்பவர்களும் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும் அவர் வலியுத்தியுள்ளார்.

காய்ச்சல் ஏற்படுமிடத்து அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்று உரிய பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், இது பண்டிகை காலம் என்பதனால், பொது போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் உணவு உண்பதற்காக நிறுத்தப்படும் உணவுசாலைகளில் தரமான உணவு விநியோகிக்கப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதுடன், ஏதேனும் முறைப்பாடுகள் இருக்குமாயின் அறிவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய காத்தான்குடி தினகரன், கல்லடி குறூப்நிருபர்கள்

The post மட்டு. மாவட்டத்தில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு appeared first on Thinakaran.



Source link