6
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் விமானப்படைக்கு சொந்தமான பீச் கிராப்ட் கிங் எயார் 350 விமானத்தினை இலங்கை விமானப்படைக்கு அவுஸ்திரேலியா அரசு அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு நேற்று (12) இரத்மலானை விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் மார்ஷல் சம்பத் தூயகொன்த் , அவுஸ்திரேலியா நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன், இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச, அவுஸ்திரேலியா நாட்டின் கடற்படை தளபதி ரியல் அட்மிரல் பிரட்டி சொன்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவுஸ்திரேலியா அரசு இந்த அன்பளிப்பை வழங்கப்பட்டதன் மூலம் கடல்சார் பாதுகாப்பு, அச்சுறுத்தல், போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இடம்பெயர்தல் போன்ற பாதுகாப்பு கடமைகளுக்காக, இலங்கை அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கிடையே அர்ப்பணிப்பு புதியதோர் மைல்கல்லாக அமையுமென இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச தெரிவித்தார்.
பாதுகாப்புச் செயலாளர் இங்கு உரையாற்றுகையில், கிங் எயார் 350 விமானத்தை அன்பளிப்பாக வழங்கிய அவுஸ்திரேலியா அரசுக்கு நன்றியை தெரிவித்தார். கடந்த அக்டோபர் மாத இறுதிப் பகுதியில் இலங்கை விமானப்படைக்கு சட்டபூர்வமாக கையளிக்கப்பட்ட இந்த நவீன இரட்டை எஞ்சின் விமானமானது, ஆட்கடத்தல் உட்பட நாடு கடந்த குற்றங்களை எதிர்த்து போராடுவதற்கு இலங்கையின் வான்வழி மற்றும் கடல்சார் கண்காணிப்பு திறன் பாரிய அளவில் மேம்படுத்த உதவும். இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பைப் பேணுவதற்கு இரு நாடுகளும் மேற்கொள்ளும் பரஸ்பர முயற்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில் இச்சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு அமைந்துள்ளதென அவுஸ்திரேலிய நாட்டின் உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன் தெரிவித்தார்.இரு நாடுகளுக்கிடையே விமான அன்பளிப்பு ஒப்பந்தத்தில் இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச மற்றும் அவுஸ்திரேலியா நாட்டின் சார்பாக கடல்படைத்தளபதி ரியல் அட்மிரல் பிரட்டி சொன்டர் கலந்துகொண்டு கைச்சாத்திட்டனர்.
அஷ்ரப் ஏ சமத்