21
தென்னிலங்கையில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளதுடன் தாயும் தந்தையும் படுகாயமடைந்துள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், பின்னதுவ மற்றும் இமதுவ நுழைவாயில்களுக்கிடையில் 100 ஆவது கிலோமீற்றர் அருகே இவர்கள் பயணித்த கார் கனரக லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மாத்தறை நுபே பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய உபே சின்ஹ ஆராச்சிகே சதீஷா மற்றும் அவரது சகோதரியான 10 வயதுடைய செனுதி தம்சரா ஆகிய இரு சிறுமிகளே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
மேலும், விபத்தில் உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோர் படுகாயமடைந்துள்ள நிலையில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறுமிகளின் தாயார் மாத்தறை புனித தோமஸ் பிரின்ஸ் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராகவும் தந்தை மின்சார சபையில் உயரதிகாரியாகவும் கடமையாற்றுகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த மூத்த சிறுமியின் நோய் தொடர்பாக, நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் வைத்தியரை சந்தித்து சிகிச்சை பெற்றதன் பின்னர் மீண்டும் மாத்தறையிலுள்ள தமது வீடுநோக்கி பயணித்துக்கொண்டிருக்கையில், கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற லொறியின் பின்புறம் வலது பக்கமாக கார் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து இடம்பெற்று சில நிமிடங்களில் 10 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். பலத்த காயங்களுக்குள்ளான பெற்றோரும் மூத்த மகளும் வீதியில் பயணித்த வாகன சாரதிகளால் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, ஆபத்தான நிலையிலிருந்த 12 வயது சிறுமி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்தின்போது உயிரிழந்த இளைய மகள் தனது தாயுடன் காரின் இடது பக்க முன் இருக்கையில் அமர்ந்திருந்ததாகவும், மூத்த மகள் பின் இருக்கையில் பயணித்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் கார் பலத்த சேதமடைந்துள்ளதுடன், லொறியின் பின் வலது பக்கம் சிறிதளவு சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கார் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமென என சந்தேகிக்கும் பொலிஸார் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பண்டாரகம பிமல் ஜயசிங்க