நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் புஷ்பா 2. இதன் பிரீமியர் ஷோ, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் படம் வெளியாவாவதற்கு முன்தினம் திரையிடப்பட்டது. படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் அந்த திரையரங்கிற்கு வர உள்ளதாக தகவல் வெளியானதால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.
இரவு 9.30 மணியளவில் அல்லு அர்ஜுன், அவரது மனைவி மற்றும் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் திரையரங்கிற்கு படம் பார்க்க வந்தனர். இதை அறிந்த ரசிகர்கள், அல்லு அர்ஜுனை காண திரையரங்கிற்குள் முண்டியடித்துக் கொண்டு நுழைந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், ஏராளமானோர் மயங்கி விழுந்தனர். 35 வயது மதிக்கத்தக்க ரேவதி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அனுமதியின்றி சிறப்புக் காட்சி திரையிட்ட சந்தியா திரையரங்கம், நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாவலர்கள் குழு மீது சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தெரிந்தே மரணத்தை விளைவிக்கும் குற்றத்தில் ஈடுபடுவது மற்றும் திட்டமிட்டு கொடும் காயத்தை ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முன்னறிவிப்பின்றி அல்லு அர்ஜுன் படம் பார்க்க வந்ததாகவும், அவரது பாதுகாப்பு குழுவினர், ஏற்கெனவே குழப்பமான சூழ்நிலையை மோசமாக்கும் வகையில் கூட்டத்தை பிடித்து தள்ளியதாகவும் காவல்துறை தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், அல்லு அர்ஜுன் வருகையை முன்கூட்டியே அறிந்திருந்தபோதும் திரையரங்கு நிர்வாகம் போதிய பாதுகாப்பு வசதிகளை செய்யவில்லை என்றும், தங்களது தரப்பில் எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை என்றும் காவல்துறை விளக்கமளித்தது. இந்த வழக்கில் தான் தற்போது அல்லு அர்ஜுன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
He will get Bail soon 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥#AlluArjunArrest pic.twitter.com/CT1G7wA0cH
— SRKIAN (@SRK_Arlo) December 13, 2024
வெள்ளை நிற ஷ்ரக் டிஷர்ட் மற்றும் பேண்ட்டுடன் கையில் டீக்கப் ஒன்றை வைத்து குடித்தவாரே போலீசாரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் அல்லு அர்ஜுன், பின்னர் போலீசார் அவருக்கு விளக்கமளித்து போலீஸ் காருக்கு அழைத்து செல்லும் போது அவரது மனைவி சினேகா ரெட்டி கண்கலங்கி நின்றார். மனைவி கண்கலங்குவதை பார்த்த அல்லு அர்ஜுன் மீண்டும் தன் மனைவி அருகில் வந்து சமாதானம் செய்து கன்னத்தில் முத்தமிட்டபின் போலீஸ் காரில் ஏறி சென்றார். திரையரங்க உரிமையாளர் மற்றும் மேலாளரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அல்லு அர்ஜுனின் கைது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தளம் முழுவதும் அவரது கைது மற்றும் அது தொடர்பான போட்டோ, விடியோக்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் விரைவில் பெயில் பெற்று அல்லு அர்ஜுன் வெளியே வருவார் என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
.