ஐதராபாத் சிறையிலிருந்து நடிகர் அல்லு அர்ஜுன் இன்று காலை விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 4-ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில், ரசிகர்களுடன் தான் நடித்த புஷ்பா 2 படம் பார்க்க அல்லு அர்ஜூன் சென்றார். அப்போது ரசிகர்கள் முண்டியடித்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக, சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) காலை அல்லு அர்ஜூன் வீட்டிற்கு சென்ற காவலர்கள் அவரை கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. இதனிடையே, இந்த வழக்கில் பிணை கோரி அல்லு அர்ஜுன் தரப்பில் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஸ்ரீதேவி முன்னிலையில் மாலையில் நடைபெற்றபோது, நடந்த சம்பவத்திற்கு நடிகரை மட்டுமே எப்படி பொறுப்பேற்க சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, அல்லு அர்ஜுனுக்கு 4 வாரங்கள் இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டார்.
#JUSTIN நடிகர் அல்லு அர்ஜூன் ஐதராபாத் சிறையிலிருந்து விடுதலை #AlluArjun📷 #Release #News18Tamilnadu | https://t.co/Wv2i7rzVqn pic.twitter.com/SGNvNhOYNc
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 14, 2024
ஆனாலும் ஜாமின் உத்தரவுகள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் அல்லு அர்ஜூன் நேற்றைய இரவை சிறையிலேயே கழிக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இன்று காலை ஜாமீன் உத்தரவு கிடைத்தவுடன் நடிகர் அல்லு அர்ஜூன் விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவரது ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
.