மொரகொட வனவிலங்கு வலயத்திற்குட்பட்ட உனகொல்லேவ பிரதேசத்தில் பயிர்ச்செய்கைக்காக வெட்டப்பட்ட பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்த காட்டு யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கிராமம் தொடர்ந்து காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதுடன் மானங்கட்டிய மற்றும் ரிட்டிகல வனங்களில் இருந்து இரவு வேளையில் உணவு தேடி வந்த காட்டு யானை கிணற்றில் வீழ்ந்துள்ளதாக பிரதேசவாசிகளின் அறிவித்தலின் பிரகாரம் மொரகொட மற்றும் சிட்டிகல வனவிலங்கு அதிகாரிகள் காட்டு யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்ததுடன். இந்நிகழ்வைக் காண பெரும்பாலான மக்கள் அந்த இடத்தில் கூடி இருந்தனர்.
ஜேசிபி இயந்திரம் மூலம் காட்டு யானையை மீட்கும் நடவடிக்கையினை ஆரம்பித்ததுடன் கிணறு சுமார் 40 அடி ஆழம் உள்ளதாலும் பெய்து வரும் மழையினால் கிணறு முழுமையாக நிறம்பியுள்ளதாலும் வனவிலங்கு அதிகாரிகள் கடும் சிரமத்திற்கு மத்தியில் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காட்டு யானை கரைக்கு வந்ததையடுத்து ஜேசிபி இயந்திரத்தை தாக்கிவிட்டு உனகொல்லேவ வனத்தில் தப்பிச் சென்றுள்ளது.
இவ்வாறான ஆபத்தான சூழ்நிலைகளை காண்பதற்கு பிரதேச மக்கள் கூடுவது ஆபத்தானது எனவும் அதனால் பாதிப்புகள் அதிகம் எனவும் இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் கூடுவதை தவிர்த்து கொள்ளும்படி வனவிலங்கு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்
The post பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்த காட்டு யானை மீட்பு appeared first on Thinakaran.