நடிகர் ஜெயம் ரவியின் புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழக போலீஸ் டி.ஜி.பி-யின் மகள் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
“இறுதிச்சுற்று”, “சூரரைப் போற்று” போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கவிருந்த “புறநானூறு” படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், இந்தக் கதையை சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்க உள்ளதாகக் கூறப்பட்டது. இப்படத்தின் அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
குறிப்பாக இப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா உடன் நடிகர் ஜெயம் ரவி இணைந்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதற்கிடையே, ஜெயம் ரவியின் மற்றொரு பட அறிவிப்பு வெளியானது.
“டாடா” படத்தை இயக்கிய கணேஷ் கே. பாபு தான் ஜெயம் ரவியின் அடுத்தப் படத்தை இயக்கவுள்ளார். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நடிக்கிறார். ஏற்கனவே இந்த தகவல் கசிந்து வந்த நிலையில், நேற்று வெளியான படத்தின் பூஜை ஸ்டில் மூலம் இத்தகவல் உறுதியானது.
இதுமட்டுமல்ல, படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் பி. வாசுவின் மகன் சக்தி வாசு நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இது அவரின் கம்பேக் படமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
படத்தின் எழுத்துப்பணிகளில் இயக்குநர் ரத்ன குமாரும், எழுத்தாளர் பாக்கியம் சங்கரும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
.