புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அரசுக்குச் சொந்தமான உணவகத்தை தான் விலைக்கு கேட்கவில்லை என இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “புதுச்சேரி அரசுக்குச் சொந்தமான உணவகத்தை விலைக்கு கேட்டதாக பரவி வரும் செய்திகளுக்கு விளக்கமளிக்க விரும்புகிறேன். எனது ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (Love Insurance Kompany) படத்திற்காக புதுச்சேரி விமான நிலையத்தை பார்க்கவும் அங்கு படப்பிடிப்பை நடத்த அனுமதி கோரவும் சென்றேன்.
மேலும், மரியாதை நிமித்தமாக புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரை காணச் சென்றேன்.
அப்போது என்னுடன் வந்த மேலாளர் அமைச்சருடன் உணவகத்தை விலைக்கு வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அது தவறுதலாக என்னுடன் இணைக்கப்பட்டுள்ளது” என்றும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியான மீம்ஸ்கள் வேடிக்கையாக இருந்ததாகவும் அதேநேரம் தேவையற்றது என்றும் விக்னேஷ் சிவன் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான சீகல்ஸ் உணவகத்தை விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டது தொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
.