பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான 19-ஆவது தவணை நிதி வரும் பிப்ரவரி 2025-ல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகள் தலா ரூ.2,000 வீதம் மூன்று சம தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 பெறுகிறார்கள். இந்த தொகையானது விரைவில் ரூ.8,000-ஆக உயர்த்தப்பட உள்ளதாக பல மாதங்களாக தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் விவசாயிகளுக்கான இந்த நிதி உதவி எப்போது அதிகரிக்கப்படுமென்ற உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் PM-KISAN திட்டத்தின் கீழ் ஆண்டு பலன் தொகையான 6,000 ரூபாயை உயர்த்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தகவல் தெரிவித்து உள்ளது. 2019-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட PM-KISAN திட்டம், தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக மூன்று சம தவணைகளில் ரூ.2,000 செலுத்தி வருகிறது.
இதையும் படிக்க:
SIP முதலீடு மூலமாக 70 லட்ச ரூபாய் வீட்டை வெறும் 10 வருடங்களில் வாங்குவது எப்படி?
“தற்போது PM-KISAN திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இந்த தொகையை உயர்த்துவதற்கான எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை” என்று சமீபத்தில் விவசாயத்துறை இணை அமைச்சர் ராம்நாத் தாக்கூர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். இதன் மூலம் பல மாதங்களாக பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் நிதி அதிகரிக்கப்பட உள்ளது என்று உலவி வந்த தகவல்கள் உறுதியானவை அல்ல என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 18 தவணைகளில் ரூ.3.46 லட்சம் கோடியை அரசு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கியுள்ளது. மேலும் விவசாயிகளை மையமாகக் கொண்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பு மூலம் இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளையும் இந்த திட்டத்தின் பலன்கள் சென்றடைவதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் 18-ஆம் தவணை கடந்த அக்டோபர் 5, 2024 அன்று வெளியிடப்பட்டது. தற்போது கிசான் சம்மன் நிதியின் 19-ஆம் தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். 2025 பிப்ரவரி முதல் வாரத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு 19-ஆம் தவணை நிதி வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் 19-ஆம் தவணைக்கான தேதியை மத்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் தவணை ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
.