SIP முதலீடு மூலமாக ரூ.70 லட்சம் மதிப்புள்ள கனவு வீட்டை வாங்குவதற்கான விரைவான வழி எது?. இந்த கணக்கீடுகள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு வீடு வாங்குவதற்கு பெரிய அளவிலான தொகை வேண்டும் என்பது நமக்கு தெரியும். அதனை கேஷ் கொடுத்து வாங்குவதற்கு முதலில் டவுன் பேமெண்ட் ஏற்பாடு செய்து விட்டு, மீதம் இருக்கக்கூடிய தொகையை ஹோம் லோன் மூலமாக நாம் தயார் செய்வது தற்போது வழக்கமாக உள்ளது. 50 லட்ச ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்ட ஒரு வீடு வாங்குவது என்பது மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு நபருக்கு அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
எனவே அவர் எடுக்கும் முக்கியமான ஒரு முடிவு ஹோம் லோனாக தான் இருக்கும். ஆனால் ஒருவர் SIP முதலீடு மூலமாக விரைவில் கனவு வீட்டை வாங்க முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? இப்பொழுது இந்த இரண்டு சூழ்நிலைகளையும் ஒப்பிட்டு பார்த்து எந்த வழி மூலமாக வீடு வாங்குவதற்கு விரைவாக பணம் சேர்க்க முடியும் என்பதை பார்க்கலாம்.
ஹோம் லோன் மூலமாக வீடு வாங்குவதற்கு கடன் பெற நினைப்பவர் ஒரு வங்கியை அணுகும் பொழுது கடன் வழங்குனர் அவருக்கு கடனை திருப்பி செலுத்துவதற்கு 15 வருடங்கள் அல்லது அதற்கும் அதிகமான கால அளவை வழங்குவார். ஒரு சில சூழ்நிலைகளில் இது 30 வருடங்கள் வரை கூட நீட்டிக்கப்படலாம். நீண்ட கால அளவை கொண்ட லோனில் EMI குறைவாக இருந்தாலும் இறுதியில் நீங்கள் செலுத்தக்கூடிய வட்டி அதிகமாக இருக்கும். ஆனால் குறைவான கால அளவில் EMI தொகை அதிகமாக செலுத்த வேண்டும். ஆனால் இந்த சூழ்நிலையில் நாம் செலுத்தும் வட்டி குறைவாக இருக்கும்.
இதனை ஒரு உதாரணம் மூலமாக புரிந்து கொள்ளலாம். நீங்கள் 65 லட்ச ரூபாய்க்கு ஒரு ஹோம் லோனை வருடத்திற்கு 9.5% வட்டியில் 20 வருடங்கள் மற்றும் 30 வருடங்கள் கால அளவில் எடுப்பதாக வைத்துக் கொள்வோம். 20 வருடங்களுக்கு இந்த கடனை நீங்கள் வாங்கும் பொழுது உங்களுடைய மாத EMI 60,589 ரூபாயாக இருக்கும். இதில் நீங்கள் 80,41,247 ரூபாயை வட்டியாக செலுத்துவீர்கள். மொத்தமாக நீங்கள் செலுத்த வேண்டிய தொகை 1,45,41,247 ரூபாய்.
ஆனால் இதே லோனை நீங்கள் 30 வருட காலத்திற்கு வாங்கினீர்கள் என்றால் உங்களுடைய மாத EMI 54,656 ரூபாயாக இருக்கும். ஆனால் உங்களுடைய மொத்த வட்டி 1,31,75,988 ரூபாயாகவும், மொத்தமாக நீங்கள் 1,96,75,988 ரூபாயாகவும் செலுத்த வேண்டும்.
முதலீட்டுக்கு பதிலாக ஒருவர் ஏன் ஹோம் லோனை தேர்வு செய்கிறார்?
ஒரு சில காரணங்களுக்காக இது ஒருவர் எடுக்கக்கூடிய மிக முக்கியமான ஒரு பொருளாதார முடிவாக இருக்கும். ரியல் எஸ்டேட் என்பது தற்போது நாளுக்கு நாள் விலை உயர்ந்து கொண்டே போகிறது. ஒரே ப்ராப்பர்ட்டியை இன்று வாங்குவதற்கு பதிலாக நீங்கள் காலதாமதமாக எடுக்கும் முடிவின் காரணத்தால் அதிக விலை கொடுத்து வாங்க நேரிடலாம். இதுபோன்ற சூழ்நிலையில் விலை உயர்ந்த பொருளாதார இலக்கை பூர்த்தி செய்வதற்கு ஒருவர் உடனடியாக ஹோம் லோனை தேர்வு செய்கிறார். மேலும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் முதலீட்டை நம்பி வீடு வாங்குவதற்கு பணம் சேர்க்க அவர்களுக்கு போதுமான கால அவகாசம் இருக்காது.
ஹோம் லோனுக்கு பதிலாக ஒருவர் ஏன் முதலீட்டை தேர்வு செய்ய வேண்டும்?
20 அல்லது 30 வயதுகளில் இருக்கக்கூடியவர்கள் ஹோம் லோனை திருப்பி செலுத்துவதற்கு அதிக கால அவகாசத்தை பெற்றிருப்பார்கள். எனவே அவர்கள் தனக்கு தேவையான வீட்டை வாங்குவதற்கான பணத்தை ஏற்பாடு செய்துவிட்டு, அதன் பிறகு தங்களுடைய கனவை பூர்த்தி செய்யலாம். முதலீடு செய்து விட்டு ஒரு வீடு வாங்குவதற்கு போதுமான கால அவகாசம் இவர்களிடம் இருக்கும்.
ஹோம் லோனுக்கான கணக்கீடு
70 லட்சம் ரூபாய் கடனை ஒருவர் 9.5% வட்டிக்கு 25 வருட காலத்திற்கு வாங்குவதாக வைத்துக் கொள்ளலாம். இவர் தன்னுடைய வீட்டுக்கு 10% தொகையை டவுன் பேமெண்டாக ஏற்பாடு செய்து விட்டதாக கருதுவோம். எனவே வீட்டின் மதிப்பு 77 லட்சம் ரூபாய்.
ஹோம் லோனுக்கான EMI என்னவாக இருக்கும்?
70 லட்சம் ரூபாய் ஹோம் லோனுக்கு மாத EMI 61,159 ரூபாயாக இருக்கும். இந்த சூழ்நிலையில் வட்டியானது 1,13,47,630 ரூபாய் ஆகவும் மொத்தமாக செலுத்த வேண்டிய தொகை 1,83,47,630 ரூபாயாக இருக்கும்.
SIP முதலீடு
இப்போது இந்த ஹோம் லோன் EMI தொகையை மாத SIP முதலீட்டு தொகையாக எடுத்துக் கொள்ளலாம். அதாவது ஒருவர் 61,159 ரூபாயை SIP-ல் முதலீடு செய்வதாக கருதுவோம். SIP முதலீடு மூலமாக ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 11% ரிட்டன் கிடைக்கும். 10 வருடங்களில் இவருடைய முதலீட்டு தொகை 73,39,080 ரூபாயாக இருக்கும். இதற்கான வரவு 60,53,964 ரூபாயாகவும், மொத்தமாக 10 வருடங்கள் கழித்து 1,33,93,044 கையில் கிடைக்கும்.
10 வருடங்கள் கழித்து 75 லட்ச ரூபாய் வீடானது 5% அதிகரித்து அதற்கான விலை 1,25,42,488.63 ரூபாயாக விற்பனை செய்யப்படலாம். வரிகளை செலுத்திய பிறகு SIP முதலீடு மூலமாக வீடு வாங்குவதற்கு இப்போது உங்களிடம் போதுமான தொகை கையில் இருக்கும்.
.