முன்னணி நடிகைகள் படத்தின் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போடுவது தற்போது இயல்பான விஷயமாக மாறி வருகிறது. இந்நிலையில் பிரபாஸ் நடித்து வரும் ‘தி ராஜா சாப்’ படத்தில் ஒரு பாடலுக்கு நயன்தாரா நடனமாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வருடத்தில் வெளியான புஷ்பா 1 படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார். அது பட்டி தொட்டியெங்கும் கிட்டடித்தது. தொடர்ந்து, ஜெயிலர் படத்தில் தமன்னா, சமீபத்தில் வெளிவந்த புஷ்பா 2 படத்தில் ஸ்ரீலீலா என இவர்களின் நடனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தெலுங்கு படங்களில் முன்னணி நடிகர்களின் படங்களில் சிறப்பு பாடலுக்கு நடிகைகள் நடனமாடுவது இயல்பான ஒன்று. இயக்குநர் மாருதி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தி ராஜா சாப்’படத்தில் முன்னணி நடிகரான பிரபாஸ் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபாஸுடன் மாளவிகா மோகனன், சஞ்சய் தத், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடித்து வரும் நயன்தாரா, இந்த படத்தின் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் நடித்த சிவாஜி, விஜய் நடித்த சிவகாசி, சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் ஆகிய படங்களில் நடிகை நயன்தாரா சிறப்புப் பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
தற்போது நயன்தாரா டெஸ்ட், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டுடண்ட், ராக்காயி ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நயன்தாரா வாழ்க்கை குறித்த ஆவணப் படத்தில் நானும் ரவுடி தான் பட காட்சியை பயன்படுத்திய விவகாரத்தில் நயன்தாரா, தனுஷை விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
.