12 நாட்களுக்குப் பிறகு நாமக்கல் முட்டை விலை சரியத் தொடங்கியுள்ளது. உச்சத்தில் இருந்த முட்டையின் விலை தற்போது சரி என்ன காரணம் என்பது குறித்து பார்க்கலாம்.
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில் முட்டைக்கான கொள்முதல் விலையை நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி), தினசரி அறிவித்து வருகிறது.
அதன்படி, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.90 ஆக இருந்த நிலையில், 20 காசுகள் குறைந்து 5 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சென்னையில் முட்டை ஒன்று சில்லறை விற்பனையில் 6 ரூபாய் 50 காசுகள் முதல் 7 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 2 மாதங்களாக முட்டையின் விலை 5 காசுகள் வீதம் படிப்படியாக உயர்ந்து வந்தது. அதன்படி இந்த மாதம் 4-ம் தேதி முட்டை ஒன்று 5 ரூபாய் 90 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 50 ஆண்டுகள் கோழிப்பண்ணை வரலாற்றிலேயே இதுவே உச்சபட்ச விலையாகக் கருதப்பட்டது. நேற்று வரை சுமார் 12 நாட்கள் இதே விலை நீடித்து வந்தது. இந்நிலையில் இன்று முட்டையின் விலை 20 காசுகள் குறைந்து 5 ரூபாய் 70 காசுகளாக விற்பனை செய்யப்படுவது பொதுமக்கள் மத்தியில் சற்று நிம்மதிப் பெருமூச்சு அடைய வைத்துள்ளது.
குளிர் காலம் என்பதால் முட்டை உற்பத்தி சற்று அதிகரித்துள்ளதாகவும் அதனால் விலை சற்று குறைக்கப்பட்டுள்ளதாகவும் வரும் நாட்களில் முட்டையின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.