இன்றைய இளைஞர்கள் படித்து முடித்தவுடன் பெரிய நிறுவனங்களில் கை நிறைய சம்பளம் பெறும் வேலைக்குச் செல்ல ஆர்வம் காட்டாமல் சொந்தமாக தொழில் தொடங்கவே பெரிதும் விரும்புகின்றனர். மேலும் சமீபத்திய ஆண்டுகளில் ஸ்டார்டப் கலாச்சாரம் பெருகி வரும் நிலையில், இளம் இந்திய தொழில்முனைவோர் வணிக உலகில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். முக்கியமாக அவர்களின் அறிவு மற்றும் திறன்களை விரிவுபடுத்துவதில் இணையம் முக்கிய பங்கு வகிக்கிறது என்றே சொல்லலாம். ஆன்லைன் படிப்புகள் மற்றும் பயிற்சிகள் மூலம், அவர்கள் ஸ்டார்ட்அப்கள் மற்றும் நிறுவனங்களை உருவாக்க தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவத்தை எளிதாக பெறுகிறார்கள்.
கிஷன் பகாரியா, ஒரு தொழில்நுட்ப மேதை. அவர் ஆன்லைனில் பெற்ற அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்தி ஒரு அசாதாரண பயணத்தைத் தொடங்கினார். கற்றல் மீதான அவரது ஆர்வம் மற்றும் புதுமையான அணுகுமுறை அவரை ஒரு நிறுவனத்தை உருவாக்க வழிவகுத்தது. பின்னர் அவர் வேர்ட்பிரஸ்ஸின் (WordPress) தாய் நிறுவனமான ஆட்டோமேட்டிக்கிற்கு தான் தொடங்கிய நிறுவனத்தை ரூ.416 கோடிக்கு விற்றார்.
அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகாரைச் சேர்ந்த கிஷன், “Texts.com” என்ற மெசேஜிங் செயலியை உருவாக்கினார். இந்த செயலி உங்களுக்குப் பிடித்த மெசேஜ் செயலிகள் அனைத்தையும் ஒரே இடத்தில் நிர்வகிக்க ஒரு பிரத்யேக தளத்தை வழங்குகிறது. இது வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) மற்றும் டெலிகிராம் போன்ற பிரபலமான சோசியல் மீடியா செயலிகளை இடைமுகத்தின் கீழ் சிரமமின்றி ஒருங்கிணைக்கிறது. எதிர்காலத்தில் இந்த செயலியை மேலும் மேம்படுத்தும் திட்டங்கள் உள்ளதாகவும் தெரிகிறது.
கிஷனின் புதுமையான செயலி, ஆட்டோமேட்டிக்கின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அதன் நிறுவனர் மாட் முல்லன்வெக்கின் கவனத்தை ஈர்த்தது. இதன் விளைவாக, வெறும் 26 வயதான இந்திய தொழிலதிபர் அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, தான் உருவாக்கிய Texts.com என்ற செயலியை $50 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 416 கோடி) தொகைக்கு விற்றார்.
நார்த்ஈஸ்ட் லைவ் அறிக்கையின்படி, கிஷனின் ஆரம்ப கால வாழ்க்கை பற்றி சொல்ல வேண்டுமென்றால் திப்ருகரில் உள்ள டான் போஸ்கோ பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை பயின்றார். பின்னர் அவர் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளை திப்ருகாரில் உள்ள அக்ரசென் அகாடமியில் முடித்தார். ஆனால் எல்லாரையும் போல் பள்ளிப் படிப்பை முடித்ததும் கிஷன் கல்லூரிக்குச் செல்லவில்லை; மாறாக, அவர் தனது திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், தனது அறிவை விரிவுபடுத்தவும் இணையம் மற்றும் ஆன்லைன் படிப்புகளை நம்பியிருந்தார். ஐஐடி, ஐஐஎம் போன்ற பிரபலமான கல்லூரிகளில் படித்தால் தான் பெரிய ஸ்டார்டப் நிறுவனத்தை தொடங்க முடியும் என்ற கருத்தை உடைத்திருக்கிறார் கிஷன். சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற கனவு காணும் பல இளைஞர்களுக்கு இது உத்வேகம் அளிப்பதாக உள்ளது.
.