பிரபல இந்தி டாக் ஷோவில் தொகுப்பாளர், இயக்குனர் அட்லீயிடம் எல்லை மீறி கேள்வி எழுப்பினார். இதற்கு அட்லி கொடுத்த பதிலடி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
இந்தி சினிமாவில் ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கிய ஜவான் என்ற திரைப்படம் 1150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த திரைப்படத்தின் மூலம் அட்லிக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அடுத்ததாக அவர் சல்மான் கானை வைத்து படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே தமிழில் வெளியான தெறி படத்தை தழுவி பேபி ஜான் என்ற படத்தை அட்லி இந்தியில் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியில் பிரபல நிகழ்ச்சியாக இருக்கும் கபில் சர்மா நிகழ்ச்சியில் பட குழுவினர் பங்கேற்றனர். அப்போது இந்திய சினிமாவில் இளம் இயக்குனர் மற்றும் வெற்றிகரமான தயாரிப்பாளராக அட்லி இருந்து வருவதை கபில் சர்மா சுட்டிக் காட்டினார்.
பின்னர், ‘முதல் முறையாக ஒரு ஸ்டாரை குழுவாக சந்திக்கும் போது அவர்கள் அட்லி எங்கே என்று கேட்டிருக்கிறார்களா?’ என்று அட்லீயை கிண்டல் செய்யும் விதமாக தொகுப்பாளர் கபில் ஷர்மா கேள்வி எழுப்பினார்.
இது உடனடியாக அட்லீக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் அவர் அசத்தலான பதில் கொடுத்து தொகுப்பாளருக்கு அதிர்ச்சியை அளித்தார். தொகுப்பாளரின் கேள்விக்கு பதில் அளித்த அட்லி, ‘இந்த நேரத்தில் ஏ.ஆர். முருகதாஸ் அவர்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளேன். அவர்தான் எனது முதல் படத்தை தயாரித்தார். அவர் என்னால் செய்ய முடியுமா? முடியாதா? என்பதை பார்க்கவில்லை.
என் தோற்றத்தை அவர் கவனிக்கவில்லை. என்னுடைய கதையை மட்டும் கேட்டார். அதே மாதிரி தான் நாம் உலகத்தை பார்க்க வேண்டும். வெளித்தோற்றத்தை வைத்துக்கொண்டு யாரையும் மதிப்பீட்டு விடக்கூடாது. அவர்களின் திறமையை வைத்துதான் மதிப்பிட வேண்டும். என்று பதிலளித்தார். அட்லியின் இந்த பதில் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
.