கண்டி பல்லேகெலேவில் நடைபெற்ற லங்கா T-10 கிரிக்கெட் போட்டித் தொடரின் போது மேற்கிந்திய தீவுகள் வீரர் ஒருவருக்கு பணத்திற்காக போட்டியை காட்டிக் கொடுக்க அழைப்பு விடுத்த சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளர் பிரேம் தக்கரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று (20) அழைக்கப்பட்டது.

சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தமது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

அதற்குப் பதிலளித்த அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி உதார கருணாதிலக்க, சந்தேகநபரை இலங்கையில் தடுத்து வைக்க நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றார்.

இதன்படி, குறித்த சந்தேகநபரை 500,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டதுடன், சந்தேகநபர் வெளிநாடு செல்வதைத் தடைசெய்து உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

மேலும், சந்தேகநபர் ஒவ்வொரு புதன்கிழமையும் விளையாட்டு ஊழல் விசாரணைப் பொலிஸ் பிரிவில் ஆஜராக வேண்டும் என மற்றுமொரு பிணை நிபந்தனை விதிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, ஜனவரி 27ம் திகதி மீண்டும் முறைப்பாட்டை அழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.



Source link