ஆட்டம் இழந்ததால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ஸ்டெம்புகளை காலால் எட்டி உதைத்த தென்னாப்பிரிக்க வீரர் ஹெய்ன்ரிச் கிளாசனுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்த நிலையில் இரண்டாவது போட்டி ஒரு நாள் போட்டி நேற்று கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 329 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் ரிஸ்வான் 80 ரன்களும், பாபர் ஆசம் 73 ரன்களும் எடுத்தனர்.
அதிரடியாக ரன்கள் சேர்த்த காம்ரான் குலாம் 32 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்ததால் நிலையான பார்ட்னர்ஷிப்பை எந்த ஒரு பேட்ஸ்மேனாலும் ஏற்படுத்த முடியவில்லை.
இருப்பினும் அதிரடி பேட்ஸ்மேன் ஹெய்ன்ரிச் கிளாசன் 74 பந்துகளில் 97 ரன்கள் குவித்து அணி வெற்றி பெறுவதற்கு கடுமையாக முயற்சித்தார். இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணி 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 248 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இதையும் படிங்க –
3 ரன்களில் சதத்தை தவறவிட்ட கிளாசன் தென் ஆப்பிரிக்க அணியின் கடைசி விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். அப்போது ஏற்பட்ட விரக்தி காரணமாக அவர் ஸ்டெம்பை காலால் உதைத்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விதிகளை மீறியதாக கூறி ஐசிசி அவருக்கு போட்டிக்கான கட்டணத்திலிருந்து 15 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி தொடரை வென்றுள்ள நிலையில் கடைசி ஒரு நாள் போட்டி ஞாயிறு அன்று ஜோகன்ஸ்பெர்க் மைதானத்தில் நடைபெறுகிறது
.