தீ விபத்து தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றவில்லை என பெங்களூருவில் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்குச் சொந்தமான மதுபான விடுதிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்குச் சொந்தமாக பெங்களூருவில் மதுபான விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு அருகே ஒன் எய்ட் கம்யூன் (One8Commune) என்ற பெயரில் கடந்த ஆண்டு, டிசம்பரில் இந்த விடுதி தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் கோலிக்குச் சொந்தமான மதுபான விடுதியில் தீ தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாததால் ஆபத்து ஏற்படும் சூழல் இருப்பதாக சமூக ஆர்வலர் வெங்கடேஷ் என்பவர் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் அந்த மதுபான விடுதிக்கு நோட்டீஸ் அனுப்பியது. குறிப்பாக தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று பெறாதது ஏன் என விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீசுக்கு 7 நாட்களில் பதில் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இரவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து மதுபான விடுதி செயல்படுவதாகக் கூறி ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் இந்த விடுதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
.
- First Published :