நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் விலை போகாத வீரர் ஒருவர் விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் சதம் விளாசியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில், கடந்த சனிக்கிழமை பஞ்சாப் அணியும், அருணாச்சல் பிரதேஷ் அணியும் பலப்பரிட்சை நடத்தியது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் செய்ய முடிவெடுத்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய அருணாச்சல் பிரதேஷ் அணி வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக டெக்கி நேரி 42 ரன்களும், ஹார்டிக் வர்மா 38 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் யாரும் சோபிக்காததால், அருணாச்சல் பிரதேஷ் அணி 48.4 ஓவர்களில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையும் படிக்க:
கடன் அளித்ததால் கிரிக்கெட் வீரர் உத்தப்பாவுக்கு நேர்ந்த சிக்கல்.. பிடி வாரண்ட் குறித்து விளக்கம்!
165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. கேப்டன் அபிஷேக் ஷர்மா 10 ரன்களில் வெளியேற, பின்னர் களமிறங்கினார் அன்மோல்ப்ரீத் சிங். தனது சரவெடி ஆட்டத்தின் மூலம் 12 பவுண்டரிகள், 9 சிக்சர்கள் என 45 பந்துகளில் 115 ரன்களை குவித்தார் அன்மோல்ப்ரீத் சிங். இதனால் பஞ்சாப் அணி 12.5 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து, இலக்கை எட்டியது.
இந்த சதத்தின் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் (35 பந்துகளில்) சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் அன்மோல்பிரீத் சிங். இதற்கு முன்னர் யூசுப் பதான் 40 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்தது.
உலகளவில், ஜேக்-ஃப்ரேசர் மெக்கர்க் என்ற ஆஸ்திரேலிய வீரர் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 29 பந்துகளில் சதமடித்தது சாதனையாக உள்ளது. 31 பந்துகளில் சதமடித்ததன் மூலம் இந்தப் பட்டியலில் ஏபி டிவில்லியர்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், அன்மோல்ப்ரீத் சிங்கை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் ஆர்வம் காட்டாததால், அவர் விலைபோகாத வீரர் என அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் கிரிக்கெட் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் அன்மோல்ப்ரீத் சிங். ஐபிஎல் தொடரில் இதுவரை மும்பை இந்தியன்ஸ், மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகளில் அன்மோல்ப்ரீத் சிங் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
.