தோனியின் ஆலோசனைகளை வைத்துதான் சிறப்பாக விளையாடினேன் என உள்ளூர் போட்டியில் இரட்டை சதம் விளாசிய வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
23 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஸ்டேட் ஏ கோப்பைக்கான போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் 97 பந்துகளில் 201 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார்.
திரிபுரா – உத்தர பிரதேசம் அணிகளுக்கிடையிலான 23 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஸ்டேட் ஏ கோப்பைக்கான போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியின்போது முதலில் டாஸ் வென்ற திரிபுரா அணி பவுலிங் செய்ய முடிவெடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய உத்தர பிரதேச பேட்ஸ்மேன்கள், தங்கள் அதிரடி ஆட்டத்தால் ஸ்கோரை உயர்த்தினர். இதையடுத்து களமிறங்கிய சமீர் ரிஸ்வி, 13 பவுண்டரிகள், 20 சிக்சர்கள் என 97 பந்துகளில் 201 ரன்களை விளாசினார்.
இதையும் படிக்க:
ஐபிஎல் ஏலத்தில் Unsold.. ஒரே மாதத்தில் இந்தியாவில் யாருமே செய்யாத சாதனை..! ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய வீரர்..!
இதனால் உத்தரபிரதேச அணி 50 ஓவர்களின் முடிவில் 405 ரன்களை எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய திரிபுரா அணியால் 50 ஓவர்களில் 253 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதுகுறித்து பேசிய சமீர் ரிஸ்வி, “எனது சிறுவயது ஹீரோவுடன் அறையை பகிர்ந்துகொண்டுள்ளேன். அதற்கு கடவுளுக்கு எப்போதும் நன்றி சொல்லுவேன். மாஹி சாரிடம் நான் நிறைய கற்றுள்ளேன். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதால், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவரிடம் சென்று பேசுவேன். வலைப்பயிற்சியில் அவர் ஈடுபடும்போது அவரைக் கவனிப்பேன். அவர் நிதானமாக இருக்கக்கூடியவர். பவுலர் யாரென்று அவர் பார்க்க மாட்டார். வலைப்பயிற்சியின்போது நான் அவருடன் நிறைய பேசியுள்ளேன். அப்போது அவர் என்னுடைய மனநிலை குறித்தும், ஆட்டத்தை எப்படி முன்னோக்கி எடுத்துச் செல்வது என்பது குறித்தும் பேசினார்.
“அனைவரையும் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். ஆனால் மற்றவர்களிடமிருந்து நீங்கள் தனியாகத் தெரியவேண்டுமானால், உங்கள் மனநிலை முக்கியம். அனைத்து இடத்திலும் பொறுமையாக இருக்க வேண்டும். 1 பந்தில் 6 ரன்கள் எடுக்க வேண்டுமானாலும், 6 பந்துகளில் 1 ரன் எடுக்க வேண்டுமானாலும், ஒன்றுபோல இருக்க வேண்டும். நிதானமாக, தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க வேண்டும். தோல்வியைப் பற்றிக் கவலைப்பட்டால், உடனடியாக நீங்கள் கவனத்தை இழப்பீர்கள். வெற்றியும் தோல்வியும் கிரிக்கெட்டில் சாதாரணமான ஒன்றுதான். அதனால் அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல், உங்களை நம்புங்கள்” என தோனி கூறியதாகத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டவர் சமீர் ரிஸ்வி. ஆனால் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரில், இவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ரூ.95 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
.