டெல்லி விமான நிலையம், 150 இடங்களை இணைக்கும் நாட்டின் முதல் விமான நிலையம் என்கிற சிறப்பைப் பெற்றுள்ளது. சமீபத்தில் தாய் ஏர்ஏசியா எக்ஸ், டெல்லி மற்றும் பாங்காக்-டான் முயாங் (டிஎம்கே) இடையே நேரடி விமானங்களைத் தொடங்கியது. இதையடுத்து, இது டெல்லி விமான நிலையத்துடன் இணைக்கப்பட்ட 150வது இடமாக கவனம் பெற்றுள்ளது. இந்த புதிய வழித்தடம் வாரத்திற்கு இரண்டு முறை ஏர்பஸ் ஏ330 விமானங்களுடன் இயக்கப்படும். ஜனவரி 2025-ன் மத்தியில் இதனை வாரத்திற்கு நான்கு முறை என்ற அளவில் போக்குவரத்தை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் (DIAL) ஒரு அறிக்கையில், பல ஆண்டுகளாக, டெல்லி விமான நிலையம் புனோம் பென், பாலி டென்பசார், கல்கரி, மாண்ட்ரீல், வான்கூவர், வாஷிங்டன் டல்லெஸ், சிகாகோ ஓஹேர் மற்றும் டோக்கியோ ஹனேடா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பிரத்யேக சர்வதேச இடங்களுக்கு பயணங்களை உருவாக்கியது.
கடந்த தசாப்தத்தில், விமான பயணிகளின் எண்ணிக்கையில் 100 சதவீத அதிகரிப்பை பெற்று, தெற்காசியாவில் ஒரு முன்னணி போக்குவரத்து மையமாக டெல்லி அதன் நிலையை மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்தியாவிலிருந்து புறப்படும் அனைத்து நீண்ட தூர பயணங்களில், 88 சதவீத இடங்கள் டெல்லியிலிருந்து இணைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவிலிருந்து புறப்படும் அனைத்து நீண்ட தூர வாராந்திர விமானங்களில் 56 சதவீதம் டெல்லி விமான நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
இதையும் படிக்க: இந்த கிரெடிட் கார்டுகள் உங்க கிட்ட இருக்கா…? ரயில் டிக்கெட் முன்பதிவில் கேஷ்பேக் கன்ஃபார்ம்…!
இந்தியாவிலிருந்து செல்லும் நீண்ட தூரப் பயணிகளில், கிட்டத்தட்ட 50 சதவீதம் (சரியாகச் சொன்னால் 42 சதவீதம்) டெல்லியை தங்கள் நுழைவாயிலாக தேர்வு செய்கிறார்கள். இந்த விமான நிலையம் ஆண்டுதோறும் நான்கு மில்லியன் உள்நாட்டு பயணிகளுக்கு, சர்வதேச இடங்களுக்கு தடையற்ற இணைப்புகளை வழங்குகிறது. இந்திய விமான போக்குவரத்தில் பெரிய மற்றும் பரந்த அமைப்பைக் கொண்ட விமானங்களை அறிமுகப்படுத்துவது, விமான நிலையத்தை ஒரு சூப்பர்-கனெக்டர் மையமாக மாற்றுவதற்கு வசதியாக இருக்கும். இது சர்வதேச மற்றும் நீண்ட தூர பயணத்திற்கான முன்னணி தேர்வாக அதன் நிலையை மேலும் வலுப்படுத்த உதவுகிறது.
“150 இடங்களை இணைக்கும் இந்த மைல்கல், உலகளாவிய இணைப்பை மேம்படுத்துவதற்கும், உலகத் தரம் வாய்ந்த பயண அனுபவங்களை வழங்குவதற்கும் எங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். இந்தியாவை, விமானப் போக்குவரத்தின் புதிய சகாப்தத்திற்கு எடுத்துச் செல்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மேலும், உலகெங்கிலும் உள்ள பயணிகளின் விருப்ப மையமாக டெல்லி இருப்பதிலும் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்று டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விதே குமார் ஜெய்புரியார் கூறினார்.
இதையும் படிக்க: மத்திய அரசின் ரூ.2 லட்சம் விபத்துக் காப்பீட்டு திட்டம்: 48 கோடி இந்தியர்கள் பதிவு…!
டெல்லி விமான நிலையத்தின் அதிநவீன உள்கட்டமைப்பு, பயணிகளை மையமாகக் கொண்ட வசதிகள் மற்றும் திறமையான பரிமாற்ற செயல்முறைகள் ஆகியவை அதன் வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இது விமானத் துறையில் சிறந்து விளங்குவதற்கான அளவுகோலாக அமைகிறது.
December 24, 2024 7:49 AM IST