Last Updated:
பெண்களுக்கு அரசு வழக்கும் ஆயிரம் ரூபாய்க்கான திட்டத்தில், பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் பேரில், மோசடி அரங்கேறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிந்தியில் ஜிம்ஸ்-2, ஜாக்பாட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபமானவர் சன்னி லியோன்… தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, மராத்தி என பல்வேறு மொழி படங்களிலும் தடம் பதித்துள்ளார்… பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட சன்னி லியோன், தமிழில் வடகறி, ஓ மை கோஸ்ட், பேட்ட ராப் போன்ற படங்களில் நடித்துள்ளார்… பான் இண்டியா நட்சத்திரமாக அறியப்படும் சன்னி லியோன் பெயரில், மோசடி அரங்கேறியது பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
நடிகர், நடிகைகளின் போட்டோவுடன் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் வெளியான சம்பவத்தை கேள்விப்பட்டிருப்போம். இதில் இருந்து சற்று வித்தியாசமாக பிரபல நடிகை சன்னி லியோன் பேரிலேயே, சத்தீஸ்கரில் மோசடி நபர் ஒருவர் 10 மாதங்களாக அரசு உதவித் தொகையை வாங்கி வந்துள்ளார்.
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை வழங்குவது போன்ற, சத்தீஸ்கரில் திருமணமான பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மஹாதரி வந்தன் யோஜனா என்ற பெயரில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் பெண்களுக்கு இத்திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பஸ்தார் மாவட்டத்தில் உள்ள தாலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த விரேந்திர ஜோஷி என்பவர் கொடுத்த தகவலில், மோசடி நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் சன்னி லியோன் பெயரை குறிப்பிட்டு மோசடி அரங்கேற்றப்பட்டதை கண்டு அதிகாரிகளே அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Also Read : பாப்கார்னுக்கு ஜிஎஸ்டியின் கீழ் 3 விதமான வரி விதிப்பு – ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்
விரேந்திர ஜோஷி என்பவர், தனது பெயர் சன்னி லியோன் என்றும், தனது கணவர் பெயர் ஜானி சின்ஸ் என்றும் குறிப்பிட்டு, ஆயிரம் ரூபாய் உதவித் தொகைக்கு விண்ணப்பித்துள்ளார். அவரின் விண்ணப்பத்தை, ஒன்றுக்கு இரண்டு முறை அதிகாரிகள் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. அப்படி இருந்தும் சன்னி லியோன் பெயரில் மோசடி நடந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோசடி நபர் கடந்த மார்ச் முதல் டிசம்பர் மாதம் வரை, தொடர்ந்து 10 மாதங்களாக ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை பெற்றுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகமும், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையும் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளன. அதேவேளையில், சன்னி லியோன் பெயரில் பெறப்பட்டு வந்த பயனை, மாவட்ட ஆட்சியர் உடனடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். புகார் அளிக்கும் பட்சத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, மோசடியை அரங்கேற்றிய நபருக்கு பின்னால், வேறு யாரும் உள்ளனரா என்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் பேரில், சத்தீஸ்கர் அரசு வழங்கும் மகளிருக்கான ஆயிரம் ரூபாய் திட்டத்தில் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
December 23, 2024 4:19 PM IST