Last Updated:
சமூகம் சார்ந்த கருத்துகள் இடம்பெற்ற ‘ஜெய்பீம்’ படத்திற்கு விருது வழங்கப்படாமல், செம்மரக் கடத்தலை ஊக்குவிக்கும் புஷ்பா படத்திற்கு தேசிய விருது.
புஷ்பா-2 திரைப்படம் வெளியிடப்பட்ட நாளில், கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணைக்காக இன்று ஆஜராக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு காவல் துறையினர் மீண்டும் சம்மன் அனுப்பினர். அதனை ஏற்று அவர் உள்ளனர்.
புஷ்பா-2 திரைப்படம் வெளியான நாளில், ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்குக்கு நடிகர் அல்லு அர்ஜுன் வந்திருந்தார். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கிய பெண் ஒருவர் பலியாகினார். அவரது மகன் நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தவர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இதுதொடர்பாக அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்த சிக்கடப்பள்ளி காவல் நிலைய காவலர்கள், அல்லு அர்ஜுனை கைது செய்தனர். நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்ட அவர், பிணையில் வெளியே வந்தார். இந்த நிலையில், விசாரணைக்காக காவல் நிலையத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆஜராக சிக்கடப்பள்ளி காவலர்கள் மீண்டும் சம்மன் அனுப்பினர். இதனை ஏற்று, அல்லு அர்ஜுன் இன்று காவல்நிலையத்தில் ஆஜராகி போலீஸாரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான விவகாரத்தில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும், நடிகர் அல்லு அர்ஜுனை கடுமையாக சாடியிருந்தார். இதனிடையே, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாயை திரைப்பட தயாரிப்பாளர் வழங்கியுள்ளார். குடும்பத்தினருக்கு 20 கோடி ரூபாயை அல்லு அர்ஜுன் வழங்க வேண்டும் என்று திரைத்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்த நிலையில், 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை குடும்பத்தினரிடம் தயாரிப்பாளர் வழங்கினார்.
இது ஒருபுறம் இருக்க தெலங்கானா அமைச்சர் சீதாக்கா, சமூகம் சார்ந்த கருத்துகள் இடம்பெற்ற ‘ஜெய்பீம்’ படத்திற்கு விருது வழங்கப்படாமல், செம்மரக் கடத்தலை ஊக்குவிக்கும் புஷ்பா படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டிருப்பதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தெலங்கானா மாநிலம், முலுகு நகரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஊக்கமளிக்கும் ஜெய்பீம் படத்திற்கு மத்திய அரசு நியாயமான எந்த சலுகையும் கொடுக்கவில்லை என்று கவலை தெரிவித்தார். ஆனால், செம்மரக் கடத்தல் மற்றும் காவலரை நிர்வாணப்படும் காட்சிகள் இடம்பெற்ற புஷ்பா படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்தார். புஷ்பா படத்தில் கடத்தல்காரரை ஹீரோவாகவும், காவல்துறையை வில்லனாகவும் சித்தரிக்கப்படுவதாக அமைச்சர் சீதக்கா குற்றஞ்சாட்டினார்.
December 24, 2024 6:23 PM IST