கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரம் தெலங்கானாவையே உலுக்கி எடுத்துவரும் நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனை கேள்வி கணைகளால் துளைத்தெடுத்துள்ளனர் சிக்கடபள்ளி போலீசார்.
“யாரைக் கேட்டு திரையரங்கிற்கு வந்தீர்கள், எதற்காக வந்தீர்கள், அனுமதி மறுக்கப்பட்டது உங்களுக்குத் தெரியாதா?, அத்துமீறியது ஏன்?” என அடுத்தடுத்து கேள்விக்கணைகளை தொடுக்க அல்லு அர்ஜுன் திணறிப் போனதாகக் கூறப்படுகிறது.
கடந்த டிசம்பர் 4-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு புஷ்பா 2 சிறப்பு காட்சியை காண்பதற்காக நடிகர் அல்லு அர்ஜுன் சென்றிருந்தார். அவரை காண்பதற்கு ரசிகர்கள் அங்கு குவிந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிய நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுக்க, அல்லு அர்ஜுன் டிசம்பர் 13-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு அடுத்த நாளே ஜாமின் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டப்பேரவையில் நடிகர் அல்லு அர்ஜுனை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கிடையே டிசம்பர் 22-ம் தேதி அவரது வீட்டை முற்றுகையிட்ட உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கற்கறை எறிந்தும், பூந்தொட்டிகளை உடைத்தும் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பெண் உயிரிழப்பு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு 24-ம் தேதி 11 மணிக்கு ஹைதராபாத் சிக்கடபள்ளி காவல்நிலையத்தில் ஆஜராகுமாறு போலீசார் அல்லு அர்ஜுனுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி செவ்வாய்க்கிழமை காலை 11.05 மணிக்கு சிக்கடபள்ளி காவல்நிலையத்தில் 2-வது முறையாக அல்லு அர்ஜுன் ஆஜரானார்.
அவருடன் அவரது தந்தை அல்லு அரவிந்த், மாமனார் சந்திரசேகர் ரெட்டி மற்றும் வழக்கறிஞர் உள்ளிட்டோர் உடன் சென்றனர். விசாரணைக்குழு தனியறையில் அல்லு அர்ஜுனிடம் விசாரணை நடத்தியது. அதன்பிறகு மதியம் 2.45 மணியளவில் இந்த விசாரணை முடிந்து அவர் வெளியேறினார். சுமார் 3 மணி 40 நிமிடங்கள் இந்த விசாரணை நடைபெற்றது.
விசாரணையின்போது, சிக்கடபள்ளி காவல் உதவி ஆணையர் ரமேஷ்குமார், இன்ஸ்பெக்டர் ராஜுநாயக் ஆகியோர் கூட்ட நெரிசல் குறித்து தொடர் கேள்விகளை எழுப்பினர். சம்பவம் நடந்த மறுநாளே தனக்குத் தெரிய வந்ததாக நடிகர் முன்பு கூறியதால், அதுகுறித்து துருவித்துருவி விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அல்லு அர்ஜுனிடம் 50 கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
“புஷ்பா – 2 சிறப்பு காட்சிக்கு நீங்கள் வருவதற்கான அனுமதியை காவல்துறை மறுத்த தகவல் உங்களுக்கு தெரியுமா? காவல்துறையினர் உங்களிடம் அதுகுறித்து கூறினார்களா? காவல்துறை அனுமதி மறுத்த போதும் நீங்கள் சிறப்பு காட்சிக்கு வர முடிவெடுத்தது ஏன்? திரையரங்கில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது குறித்த தகவல் உங்களுக்கு தெரியவந்ததா? கூட்ட நெரிசல் ஏற்பட்டது தெரிந்துதான் சிறப்பு காட்சிக்கு வருகை தந்தீர்களா? திரையரங்கில் ரசிகர்கள் முன் தோன்றுவதற்கு முறைப்படி காவல்துறை அனுமதி வாங்கினீர்களா? பிரீமியர் காட்சியின் போது தியேட்டருக்கு வெளியே தடையை மீறி உலா வந்தது ஏன்? கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த தகவல் எப்போது கிடைத்தது? நிகழ்ச்சிக்கு எத்தனை பவுன்சர்களை ஏற்பாடு செய்திருந்தீர்கள்?” என அடுத்தடுத்து சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.
போலீசாரின் பெரும்பாலான கேள்விகளுக்கு அல்லு அர்ஜுன் பதில் அளித்ததாக தெரியவந்துள்ள நிலையில், விசாரணை முடிந்து அவர் 2.45 மணியளவில் காவல் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார். இந்நிலையில் அல்லு அர்ஜுனுக்கு பவுன்சர்களை நியமித்த ஆண்டனி என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படியுங்கள் : காங்கிரஸ் Vs பாஜக; அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கியதில் இருந்த பின்னணி இதுதான்!
இந்த விவகாரம் தெலங்கானா அரசியலிலும் பெரும் புயலை கிளப்பி வரும் நிலையில், போலீசாரின் அடுத்தக்கட்ட அதிரடி நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
December 24, 2024 5:59 PM IST