Last Updated:
விஸ்வரூபம் கதையை கேட்ட உடந்தை மணாளன், அண்ணன், தங்கை சென்டிமெண்ட் கதை, இதுக்கு தங்கையோட பெயர் பைரவியை வைத்தால் நன்றாக இருக்கும் என்று சொல்ல, அதன்படியே பைரவி என்று பெயர் வைக்கப்பட்டது.
1975 ல் அபூர்வ ராகங்களில் அறிமுகமான பிறகு மூன்று முடிச்சு, அவர்கள், கவிக்குயில், ரகுபதி ராகவ ராஜாராம், புவனா ஒரு கேள்விக்குறி, 16 வயதினிலே, ஆடு புலி ஆட்டம், காயத்ரி, ஆறு புஷ்பங்கள், சங்கர் சலீம், சைமன், ஆயிரம் ஜென்மங்கள், மாங்குடி மைனர் என 1978 வரை இரண்டாவது நாயகனாகவும், வில்லனாகவும் ரஜினி நடித்தார்.
1977 இறுதியில் கதாசிரியர் கலைஞானம் படம் தயாரிப்பதற்கென்று விஸ்வரூபம் என்ற கதையை எழுதினார். சாண்டோ சின்னப்ப தேவரின் கதை இலாகாவின் ஆஸ்தான கதாசிரியர் அவர் என்பதால், கலைஞானம் தயாரிக்கும் படத்துக்கு பைனான்ஸ் செய்ய தேவர் முன்வந்தார். கலைஞானம் கதையை தயார் செய்து, ரஜினியை ஹீரோவாக நடிக்க வைப்பது என முடிவு செய்தார். அதுவரை ரஜினி இரண்டாவது நாயகனாகவும், வில்லனாகவும் மட்டுமே நடித்து வந்தார்.
அப்போது ரஜினி ராயப்பேட்டையில் தனது நண்பர்கள் விட்டல், முரளியுடன் தங்கியிருந்தார். காலை நேரம் அவரை சந்தித்த கலைஞானம், தான் தயாரிக்கும் படத்தில் ரஜினி ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று சொன்னதை ரஜினியால் நம்ப முடியவில்லை. கதையை கேட்டவர், செகண்ட் ஹீரோ இல்லையே, ஹீரோதானே என்று மறுபடியும் கேட்டு தெளிவுப்படுத்திக் கொண்டார்.
ரஜினி தனது சம்பளம் மற்றும் கால்ஷீட்டை கவனித்துக் கொள்ள நண்பர் நட்ராஜை நியமித்திருந்தார். ஒரு நடிகர் நேரடியாக தயாரிப்பாளருடன் சம்பளம் பேசுவதில் நிறைய சங்கடங்கள் உண்டு. அதில் ரஜினி அப்போதே தெளிவாக இருந்தார். இரண்டாவது நாயகனாக பத்தாயிரத்துக்கும் குறைவாகவே ரஜினி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். ஹீரோ என்பதால் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம், ஐந்தாயிரம் அட்வான்ஸ் என்று கலைஞானம் சொல்ல, உடனடியாக வீட்டிற்குள் இருந்த ரஜினியிடம் நட்ராஜ் தகவலை சொல்கிறார். அடுத்த நிமிடமே ரஜினி ஓகே சொல்கிறார்.
பைரவி படத்தில் ரஜினிகாந்த்
தேவர் சொல்லித்தான் கலைஞானம் படத்தயாரிப்பில் இறங்கியது. தேவருக்கு படத்தயாரிப்பில் சில கொள்கைகள் உண்டு. புதுமுகங்களை அவர் ஹீரோவாக்குவதில்லை. ரஜினி அதுவரை ஹீரோவாக நடித்திராததால் அவரை வில்லனாக்கச் சொல்ல, கலைஞானம் மறுக்க, பத்து பைசா தரமாட்டேன் என்று கலைஞானத்திடம் சொல்லிவிட்டார் தேவர். தனது விஸ்வரூபம் கதையை விநியோகஸ்தர்கள் உடந்தை மணாளன், காதர் மற்றும் ஒருவரிடம் சொல்லி, அவர்கள் தந்த பணத்தில் படத்தை தொடங்கியது தனிக்கதை. இந்த காதர் வேறு யாருமில்லை, நடிகர் ராஜ்கிரண்தான்.
விஸ்வரூபம் கதையை கேட்ட உடந்தை மணாளன், அண்ணன், தங்கை சென்டிமெண்ட் கதை, இதுக்கு தங்கையோட பெயர் பைரவியை வைத்தால் நன்றாக இருக்கும் என்று சொல்ல, அதன்படியே பைரவி என்று பெயர் வைக்கப்பட்டது. 1978 ஜனவரி 14 பூஜையுடன் தொடங்கிய படம் 1978 ஜுன் மாதம் வெளியாகி வெற்றி பெற்றதுடன் ஹீரோவாக ரஜினியின் முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது.
இன்று ரஜினியின் சம்பளம் 100 கோடி, 150 கோடி என்று சொல்கிறார்கள். அவர் 46 வருடங்களுக்கு முன், ஹீரோவாக முதலில் வாங்கிய சம்பளம் ஐம்பதாயிரம் ரூபாய். அன்று அதுவே பெரிய தொகைதான். எங்கு தொடங்குகிறோம் என்பதல்ல, எங்கு சென்று சேர்கிறோம் என்பதே முக்கியம். அதற்கு ரஜினியே சிறந்த உதாரணம்.
December 25, 2024 10:01 PM IST
ஹீரோவாக ரஜினி வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அப்போதே இவ்வளவா