இவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முக்கிய இந்திய தொழிலதிபராக உள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள மத்திய கிழக்கின் ‘ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள சிறந்த 100 இந்திய தலைவர்கள்’ பட்டியலில் 1வது இடத்தில் இவர் உள்ளார். இருப்பினும், அவரது வெற்றிக்கான பாதை எங்கு தொடங்கியது தெரியுமா? மும்பையின் சேரிகளில்.
மும்பையில் பிறந்து வளர்ந்த சஜன், சிறு வயதிலிருந்தே பல இன்னல்களை சந்தித்து வளர்ந்தார். 16 வயதில் தந்தையை இழந்தபிறகு, குடும்பத்தைக் காப்பாற்ற, பால் விநியோகம் செய்வதிலிருந்து, புத்தகங்கள் மற்றும் பட்டாசு விற்பனை வரை என பல்வேறு வேலைகளில் ஈடுபட்டார். சஜனின் ஆரம்ப காலங்கள் சவால்கள் நிறைந்ததாக இருந்தன. இதுதான் அவரது பணி நெறிமுறை மற்றும் உறுதியை வடிவமைத்தது என்று கூட சொல்லலாம்.
1981ல் வாழ்க்கையில் இன்னும் சிறந்த வாய்ப்புகளைத் தேடி குவைத்திற்கு சென்றார் சஜன். அவர் தனது மாமாவின் கட்டட விநியோகக் கடையில் ஒரு பயிற்சி விற்பனையாளராக தனது கேரியரை தொடங்கினார். அங்கு அவரது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு அவருக்கு பதவி உயர்வை பெற்றுத் தந்தது. அங்கு அவர் மதிப்புமிக்க தொழில்துறை அனுபவத்தைப் பெற்றார். ஆனால், 1991ல் ஏற்பட்ட வளைகுடா போர் காரணமாக வேறு வழியின்றி, மும்பைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் சஜன். இது அவரது வாழ்க்கையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
அதன்பிறகு 1993ம் ஆண்டு, மிகுந்த நம்பிக்கையோடு துபாய்க்கு சென்றார் சஜன். அங்கு அவர் ஒரு வன்பொருள் கடையில் வேலை செய்யத் தொடங்கினார். ஆனால் விரைவில் தான் சேமித்து வைத்த சில ஆயிரம் திர்ஹாம்களுடன் சொந்தமாக தொழிலைத் தொடங்கினார். சஜனின் தொலைநோக்கு பார்வை மற்றும் தலைமையின் கீழ் டான்யூபின் (Danube) சிறு வணிகம் விரைவாக வளரத் தொடங்கியது.
இதையும் படிக்க: ஆதார் விவரங்களை பாதுகாப்பாக வைக்கணுமா…? லாக் செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்…!
இன்று, டான்யூப் ஆண்டுக்கு 5 பில்லியன் திராஹ்ம்ஸ் வருவாயை ஈட்டுகிறது மற்றும் வளைகுடா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் பஹ்ரைன், ஓமன், சவுதி அரேபியா, கத்தார், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
தொழில் மட்டுமின்றி சமூக நலனுக்காகவும் பல பங்களிப்புகளை செய்துள்ளார் சாஜன். சமூக முன்முயற்சிகளை ஆதரிப்பதற்காக அவர் டான்யூப் நலன்புரி சங்கத்தை நிறுவினார். மேலும், வணிகத்தில் சிறந்து விளங்கியதற்காக மதிப்புமிக்க முகமது பின் ரஷித் அல் மக்தூம் விருதுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: கடன் பெற்றவர் இறந்துவிட்டால் திருப்பி செலுத்துவது யாருடைய பொறுப்பு தெரியுமா…?
தற்போது, சாஜனின் சொத்து மதிப்பு தோராயமாக 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ.20,750 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. ரிஸ்வான் சஜனின் அபாரமான வளர்ச்சி, உலகெங்கிலும் உள்ள ஆர்வமுள்ள இளம் தொழில்முனைவோருக்கு உத்வேகமாக விளங்குகிறது.
Mumbai,Maharashtra
December 30, 2024 5:34 PM IST
16 வயதில் தந்தையை இழந்து, பால் விற்று குடும்பத்தை காப்பாற்றிய இந்தியர்… தற்போது துபாயில் கோடீஸ்வரர்..!