Last Updated:
தங்கத்தைப் போன்று வெள்ளிக்கும் ஹால்மார்க் குறியீடு… இந்திய தர நிர்ணய கழகம் பரிசீலனை
தங்கத்தைப் போன்று வெள்ளிக்கும் ஹால்மார்க் குறியீட்டை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் மத்திய அரசு இது குறித்து முக்கிய முடிவை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்களுக்கு அதன் தூய்மை தன்மைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் ஹால்மார்க் குறியீடு வழங்கப்படுகிறது. இந்தியாவில் இந்திய தர நிர்ணய கழகம் (BIS) இந்த ஹால்மார்க் குறியீட்டை வழங்கி வருகிறது.
நகை கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க ஆபரணங்களிலும் ஹால்மார்க் குறியீடு இடம்பெற வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தங்கத்தை போன்று வெள்ளிக்கும் ஹால்மார்க் குறியீடு கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக உணவு மற்றும் நுகர்வோர் நல அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, வெள்ளிக்கும் ஹால்மார்க் கொண்டு வர வேண்டும் என்று நுகர்வோர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை இந்திய தர நிர்ணய கழகம் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார். தற்போது 6 எண்கள், ஆங்கில எடுத்து குறியீட்டு கோடுகளுடன் தங்கத்திற்கு ஹால்மார்க் வழங்கப்பட்டு வருகிறது.
இதே போன்று வெள்ளிக்கும் வழங்கப்பட்டால் அதன் தரம் உறுதி செய்யப்படும் என்று ஆலோசனைகள் எழுந்துள்ளன. இன்னொரு பக்கம் தங்கத்தின் விலை போன்று வெள்ளியின் விலையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
இன்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஒரு கிராம் வெள்ளி 91.50 ரூபாயாக இருந்து வருகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 91 ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது. வெள்ளிக்கு ஹால்மார்க் வழங்குவது குறித்து பி.ஐ.எஸ் எனப்படும் இந்திய தர நிர்ணய கழகம் முடிவு எடுக்கும்.
இதையும் படிங்க – e-PAN கார்டு மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி.. வழிமுறைகள் இதோ!
இது பற்றி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த இந்திய தர நிர்ணய கழகத்தின் இயக்குனர் பிரமோத் குமார், தேவைப்பட்டால் 3 முதல் 6 மாதங்களில் வெள்ளிக்கு ஹால்மார்க் குறியீடு வழங்கும் நடைமுறையை கொண்டு வருவோம் என்று கூறினார். இது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
January 06, 2025 7:37 PM IST